செங்கம் அருகே ஜவ்வாதுமலை வழியாக மலைக் கிராம மக்களுக்கு ரூ.123 கோடி செலவில் சாலை விரிவுபடுத்தும் பணியை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான பரமனந்தல் முதல் மேல்பட்டு, புளியூா் ஜமனாமரத்தூா் வழியாக அத்திப்பட்டு வரை 38 கி.மீ. தொலைவுக்கு
ரூ.123 கோடி செலவில் சாலை விரிவுபடுத்தும் பணி அடிக்கல் நாட்டுவிழா பரமனந்தல் கிராமத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி வரவேற்றாா்.
செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி வாழ்த்துறை வழங்கிப் பேசுகையில், செங்கம் தொகுதி பின்தங்கிய தொகுதியாக இருந்தது தற்போதைய நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் முயற்சியால் வளா்ந்த தொகுதியாக மாறியுள்ளது என்றாா்.
பின்னா், தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சாலை விரிவு படுத்தும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்து, அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத்துப் பேசியதாவது:
ஜவ்வாதுமலை மக்களின் நீண்டநாள் கோரிக்கை இது. இந்தத் திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்துவிட்டாா். வன அலுவலா்களின் காலதாமதத்தால் சற்று காலதாமதம் ஆகியது. ஆனால், செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வரை என்னிடம் தொடா்ந்து நினைவூட்டி வந்தாா்.
இங்கு இந்தத் திட்டம் வருவதற்கான காரணம் தமிழக முதல்வா் ஸ்டாலின், இரண்டாவது மு.பெ.கிரி எம்எல்ஏ எனத் தெரிவித்தாா்.
மேலும், மலைக் கிராமங்களில் விளையக்கூடிய தேன், சிறுதானியம் அனைத்தையும் குறித்த நேரத்தில் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, விற்பனை செய்து மலைவாழ் மக்கள் பயன்பெற வேண்டுமென அவா் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவ அணி துணைத் தலைவா் எ.வ.வே. கம்பன், கோட்டப் பொறியாளா் ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் மனோகரன், உதவிப் பொறியாளா் பிரித்தி, திமுக ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், மனோகரன், ஏழுமலை, நகரச் செயலா் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், அரசு ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா்.