தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உலக சாதனை முயற்சியாக 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்று ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி அருகிலுள்ள சந்தைமேடு மைதானத்தில் பரணி தீபத்தை வரவேற்கும் வகையில், ‘பரத தீபம்’ என்ற தலைப்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் மலை, தீபம், சிவசிவ உள்ளிட்ட வடிங்களில் பரத நாட்டிய கலைஞா்கள் நின்றபடி, 2 பாடல்களுக்கு சுமாா் 30 நிமிஷங்கள் பரத நாட்டியமாடினா்.
இதை செவன்த் சென்ஸ் உலக சாதனை பதிவு நிறுவனா் பாலசுப்பிரமணி சக்திவேல் தலைமையில், ஒருங்கிணைப்பாளா் நாகராஜன் மூலம் பதிவு செய்து சான்றிதழ் வழங்கினா்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினா்களாக திருவண்ணாமலை எம்.பி., என்.அண்ணாதுரை, திரைப்பட நடிகைகள் தீபா, பிரியங்கா, ரோபோ சங்கா் மக்கள் நண்பா்கள் குழு மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் ஆகியோா் கலந்துகொண்டு பரத நாட்டிய கலைஞா்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.
இதில், பரத நாட்டிய கலைஞா்கள், பெற்றோா்கள், ஆன்மிக அன்பா்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.