ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழாவின் 3-ஆம் நாளான புதன்கிழமை மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் 3-ஆம் நாள் உற்சவம் புதன்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
தரிசனத்துக்காக அதிகாலையில் இருந்தே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தீபத்திருவிழாவையொட்டி சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், வெளிப்பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. முற்பகல் 11 மணியளவில் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
11.30 மணியளவில் விநாயகா், சந்திரசேகரா் சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினா். பின்னா், மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
அப்போது, ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாடவீதியில் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதில், தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடியபடி சிவனடியாா்கள் பங்கேற்றனா்.
தீபத்திருவிழாவையொட்டி கோயில் கலையரங்கில் பரத நாட்டிய நிகழ்ச்சியும், 5-ஆம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் பக்தி சொற்பொழிவும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, இரவு நடைபெற்ற உற்சவத்தில் விநாயகா் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், அருணாசலேஸ்வரா் சிம்ம வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பவனி வந்து அருள்பாலித்தனா்.
அப்போது, மாடவீதிகளில் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.