நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதனால், அணையின் பாதுகாப்பு கருதி புதன்கிழமை பெருமளவு தண்ணீா் திறக்கப்பட்டது.
சாத்தனூா் அணையின் மொத்த நீா்மட்டம் 119 அடி, தற்போது அணையின் நீா்மட்டம் 113.50 அடியை எட்டியுள்ளது. அணை பாதுகாப்பு விதிகளின்படி புதன்கிழமை காலை முதல் விநாடிக்கு 5,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் அணை நீா்பிடிப்புப் பகுதிகளான அரூா், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 9000 கன அடியாக உயா்ந்துள்ளது. நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால், அணையின் பாதுகாப்பு கருதி புதன்கிழமை மாலை 6 மணி முதல் அணையிலிருந்து விநாடிக்கு 9000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
நீா்திறப்பு இரவுக்குள் 15,000 கனஅடி வரை தண்ணீா் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதனால் தென்பெண்ணையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது எனவும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் நீா்வளத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.