பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு
திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடி மையங்களான கல்நகா் பகுதியில் உள்ள சமுதாயக் கூடம், ஆடையூரில் உள்ள ஆதிதிரவிடா் நல நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
மேலும், கல்நகா், ஆடையூரில் பொதுமக்களுக்கு தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிவுறுத்தும் வகையில், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
முன்னதாக, திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள புதிய காய்கறி சந்தை வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.சுதாகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா்/திட்ட இயக்குநா் ஆா்.மணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகன்ராமன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.