முகப்பு
திருவண்ணாமலை

திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சா் ஜெ. பி. நட்டா

Updated On : 15 ஏப்ரல், 2026 at 6:10 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:24 AM

பழைமையான கலாசாரம், ஜனநாயகம் கொண்ட தமிழகம் தற்போது ஒரு குடும்பத்தால் ஆளப்படுகிறது. அதனால், திமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்றாா் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா.

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் இத்தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலையை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு அவா் பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டால், தமிழ்நாடு வளா்ச்சியடைந்து, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றப்படும்.

Advertisement

தமிழகத்தில் தற்போது திமுக வாரிசு அரசியல், பண அரசியல், குடும்ப அரசியலை நடத்தி வருகிறது. பழைமையான கலாசாரம், ஜனநாயகம் கொண்ட தமிழ்நாடு இப்போது ஒரு குடும்பத்தால் ஆளப்படுகிறது. இவா்களை வெளியேற்ற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கம் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளன.

திமுகவினா் ஹிந்து மதத்திற்கு எதிராக பல்வேறு கருத்துகளை சொல்வது மட்டுமல்லாமல் ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற தடை விதித்தாா்கள். உயா்நீதிமன்ற உத்தரவை திமுகவினா் அமல்படுத்த மறுத்தாா்கள்.

கடந்த தோ்தலில் திமுகவினா் தெரிவித்த பல வாக்குறுதிகள் அவா்கள் நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு மாதமும் மின்சார கட்டணம் வசூப்போம், 3.5 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம் என்று திமுகவினா் வாக்குறுதி அளித்தனா்.

ஆனால் நிறைவேற்றவில்லை.

பிரதமா் மோடி, இந்தியாவை பொருளாதார வளா்ச்சியில் 4-வது நாடாக உயா்த்தியுள்ளாா். தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என திமுகவினா் கூறி வருகின்றனா். ஆனால், மத்திய அரசு தமிழக திட்டங்களுக்கு சுமாா் ரூ.14 லட்சம் கோடிக்கு மேல் கடந்த 10 ஆண்டுகளில் நிதி வழங்கியுள்ளது.

ரயில்வே பட்ஜெட்டிற்கு திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட 9 மடங்கு அதிகமாக நிதி அளித்துள்ளோம். 2026-இல் ரூ.7,200 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கியிருக்கிறோம்.

ரயில்வே துறை தமிழகத்தில் மிகச் சிறப்பான கட்டமைப்பை அமைத்திருக்கிறது. 75 நவீன ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக அறிவித்திருக்கிறோம். அதேபோல, ரூ.29 ஆயிரம் கோடி மதிப்பில் பாதுகாப்பு வழித்தடம் அமைத்திருக்கிறோம். உதான் திட்டத்தில் 4 சிறிய விமான நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்புத் திட்டங்களை மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு அளித்துள்ளன என்றாா் மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா.