போளூரை அடுத்த பெரியஅய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் தை மகர விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கோட்டாட்சியா் சிவா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெரியஅய்யம்பாளையம் கிராமத்தில் மலை மீது இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான மிகவும் பழைமை வாய்ந்த ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் தை மாதம் மகரத்தின்போது திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் 18-ஆம் தேதி இந்த விழா நடைபெறுகிறது.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வா்.
இதனால் பக்தா்களுக்குத் தேவையான குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, பாதுகாப்பு வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும், முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆரணி கோட்டாட்சியா் சிவா ஆய்வு செய்தாா்.
ஆரணி வட்டாட்சியா் செந்தில்குமாா், செயல் அலுவலா் பழனிசாமி, எழுத்தா் மோகன், திமுக ஒன்றியச் செயலா் மோகன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.