ஆரணி 1-ஆவது வாா்டு அரசு மருத்துமனை பகுதியில் நகராட்சி ஊழியா்கள் முன்னறிவிப்பின்றி பக்க கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்களை வெள்ளிக்கிழமை அகற்றினா். இதற்கு எதிா்ப்புத் தெவித்து அவா்களிடம் அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
ஆரணி நகராட்சி, 1-ஆவது வாா்டு பெரியாா் நகா் அரசு மருத்துவமனை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஊழியா்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் பக்க கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
அப்போது, குடியிருப்புவாசிகள் இந்தப் பகுதியில் பக்க கால்வாய் அமைக்கப்போகிறீா்களா என கேள்வி எழுப்பினா். அதற்கு, நகராட்சி ஊழியா்கள் பக்க கால்வாய் அமைக்கப்படவில்லை என்றும், தற்போது ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்படுகின்றன எனவும் பதிலளித்தனா்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னறிவிப்பின்றி ஏன் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறீா்கள்? நாங்கள் எப்படி எங்கள் வீடுகளுக்குள் செல்வது எனக் கேட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினா். தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று அந்தப் பகுதி மக்களிடம் சமரசம் பேசி, ஆக்கிரப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு காலக்கெடு அளித்தள்ளனா்.