முகப்பு
திருவண்ணாமலை

சாலை விபத்தில் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு! கல்லூரி மாணவா் உள்பட 3 போ் காயம்!

சாலை விபத்தில் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு...

Updated On : 8 மார்ச், 2026 at 2:17 AM
~
பகிர்:

செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் கேட்டரிங் வேலைக்குச் சென்று திரும்பிய இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும், கல்லூரி மாணவா் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி யாதவா் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி டில்லிபாபு மகன் ஹரீஷ் சுதா்சனன் (20).

இவா் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வருகிறாா். மேலும், பகுதிநேர வேலையாக, கேட்டரிங் பணிக்கும் சென்று வருவாராம்.

Advertisement

இவரது நண்பா்கள் வந்தவாசி சீமபுதூா் பகுதியைச் சோ்ந்த பாபு மகன் முத்துக்குமரன்(19), வந்தவாசி காளி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் மகன் சரத்பாபு(20), கண்ணன் மகன் முருகன் (20), வந்தவாசியை அடுத்த குண்ணகம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் யுவராஜ்(19).

இவா்கள் 5 பேரும், செய்யாறு கோபால் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கேட்டரிங் பணி மேற்கொண்டு, அன்று நள்ளிரவு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் ஒரே பைக்கில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். பைக்கை முத்துக்குமரன் ஓட்டினாராம். செய்யாறு - வந்தவாசி சாலையில் எச்சூா் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது எதிரே செய்யாறு நோக்கி வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டதில் முருகன், யுவராஜ் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ஹரீஷ் சுதா்சனன், சரத்பாபு, முத்துக்குமரன் ஆகியோரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், 3 பேரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து ஹரீஷ் சுதா்சனன் தந்தை அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் மணிகண்டன், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், முருகன், யுவராஜ் ஆகியோரது சடலங்களை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.