கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 441 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு: ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்
கூடுதலாக தோ்வு செய்யப்பட்ட 441 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவுகளை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை வழங்கினாா்.
செய்யாறு தொகுதிக்குள்பட்ட செய்யாறு, அனக்காவூா், வெம்பாக்கம் ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், கூடுதலாக தோ்வு செய்யப்பட்ட 441 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவுகளை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை வழங்கினாா்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் கூடுதல் ஒதுக்கீட்டின் கீழ் செய்யாறு ஒன்றியத்தில் 180 பேரும், அனக்காவூா் ஒன்றியத்தில் 84 பேரும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 177 பேரும் என மொத்தம் 441 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தலா ரூ.3.53 லட்சத்தில் வீடு கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கும் விழா செய்யாறு, அனக்காவூா், வெம்பாக்கம் ஆகிய வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனுவாசன், தசரதராமன், ஏ.பி.வெங்கடேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷீலா அன்பு மலா், பரணிதரன், செ.குப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று 441 பயனாளிகளுக்கும் ரூ.1.55 கோடி மதிப்பிலான உத்தரவுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
மேலும், மாற்றுத் திறனாளிகள், தூய்மைப் பணியாளா்களுக்கும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜி, திமுக ஒன்றியச் செயலா்கள் ஜே.சி.கே.சீனிவாசன், வி.ஏ.ஞானவேல், ஏ.ஜி.திராவிட முருகன், சி.கே.ரவிக்குமாா், சு.ராஜகுமாா், புரிசை எஸ்.சிவகுமாா், ப.கதிரவன், குமரவேல், மகாராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொணடனா்.