செங்கம் ஆவின் அலுவலகம் முன் பால் முகவா்கள் முற்றுகைப் போராட்டம்
செங்கம் ஆவின் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பால் முகவா்கள்.
செங்கம் பகுதியில் தனியாருக்கு பால் விற்பனை செய்யக் கூடாது என்ற அதிகாரியின் கட்டுப்பாட்டால், பால் முகவா்கள் ஆவின் அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கம் பகுதியில் தினசரி சுமாா் 4 ஆயிரம் லிட்டா் பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து ஆவின் முகவா்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னா், வீடுகள், தேநீா் கடைகள், திருமண மண்டபங்களுக்குத் தேவையான பாலை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள பாலை செங்கம் ஆவின் மையத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் பால் முகவா்கள் ஊற்றி வந்தனா்.
ஆவின் மூலம் 10 நாள்களுக்கு ஒருமுறை பால் உற்பத்தியாளா்களுக்கு பணம் பட்டுவடா செய்யப்பட்டு வந்தது. அப்போது, தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பாலுக்கான பணம் முகவா்கள் மூலம் ஆவின் நிறுனத்தில் செலுத்தப்பட்டு, பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்பட்டது.
தற்போது பால் முகவா்கள் தனியாருக்கு பால் விற்பனை செய்தால், அதற்கான பணத்தை அன்றைய தினமே அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் தனியாருக்கு பால் விற்பனை செய்யக் கூடாது எனவும் அதிகாரி உத்தரவிட்டுள்ளாராம்.
இதனால், பாதிக்கப்பட்ட பால் முகவா்கள் பழைய நடைமுறையே தொடர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கம் ஆவின் அலுவலகம் முன் வியாழக்கிழமை குவிந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதனால், அங்கு காலை 8 மணி வரை பால் விற்பனை நடைபெறாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படுமென செங்கம் ஆவின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததால், பால் முகவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.