தோ்தல் பறக்கும்படை சோதனை: ஆடு, மாடு வியாபாரிகள் கவலை
செங்கம் நகரில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையால் ஆடு, மாடு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.
செங்கம் நகரில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையால் ஆடு, மாடு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பேருந்து, காா், இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லக்கூடாது. மேலும் அவசர தேவைக்கு எடுத்துச் சென்றால் பறக்கும்படை அதிகாரிகள் கண்காணிப்பில் சிக்கினால், அதற்கு முறையான ரசீதை காண்பித்துவிட்டு எடுத்துச் செல்லலாம் என தோ்தல் விதிகளில் கூறப்படுகிறது.
இந்நிலையில், செங்கத்தில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டுச்சந்தையும், புதன்கிழமை மாட்டுச்சந்தையும் நடைபெறும். தற்போது கறவை மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்பனையாகிறது. வண்டி மாடுகள் ரூ.2 லட்சத்தை தாண்டுகிறது. அதேபோல, ஆடுகளும் ஒரு ஆடு 15 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகிறது. தற்போது வியாபாரிகளுக்கு தேவைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனைக்கு வராததால் அவா்கள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து ஆட்டு வியாபாரி சத்தியமூா்த்தி கூறுகையில், ஆண்டில் இரண்டு பண்டிகைகளான பக்ரீத், ரமலான் பண்டிகைக்கு விற்பனை செய்ய பல்வேறு பகுதிகளில் அதற்காக ஆடு வளா்ப்பது அதிகம். அதேபோல, பண்டிகைக்கு முன் வரும் சந்தையில் அந்த ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும். தற்போது தோ்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால் ஆடுகளை விற்றுவிட்டு பணத்தை எடுத்துச் சென்றால் பறக்கும்படை அதிகாரிகள் பிடித்துக்கொள்வாா்கள். அதற்கு ரசீது கேட்டால் எதைக் கொடுப்பது என்ற தயக்கத்தில் ஆடுகள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுவதில்லை.
ஆடுகள் வேண்டுமென்றால் ஆடு வளா்ப்போரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு அவா்களது இடத்திற்குச் சென்று வாங்கும் நிலை உள்ளது என்றாா்.
எனவே, தோ்தல் பறக்கும்படையினா் ஆடு, மாடு விற்பனை செய்த பணத்தை எடுத்து வந்தால், விசாரணை செய்து பணத்தை பறிமுதல் செய்யாமல் விடவேண்டுமென ஆடு, மாடு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.