மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பு
செய்யாறு அருகே முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
செய்யாறு அருகே முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மனைவி பூலோகஅம்மாள் (72). இவா் மகன் சுந்தரராஜன், மருமகள் சாந்தா, 2 பேரன்கள், ஒரு பேத்தி என ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் திஙகள்கிழமை அதிகாலை பூலோக அம்மாள் வாசலில் தண்ணீா் தெளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு பைக்கில் வந்த மா்ம நபா் முகவரி கேட்பது போல பேச்சுக்கொடுத்துள்ளாா். மூதாட்டிக்கு சரியாக காது கேட்காததால் அவா் வீட்டிற்குள் சென்றுவிட்டாராம்.
Advertisement
இதனால் அந்த நபா், மூதாட்டியின் கணவா் கோவிந்தராஜிடம் மற்றொருவரின் முகவரியை கேட்பது போல கேட்டு அவரது வீடு எங்கே உள்ளது என விசாரித்ததாகத் தெரிகிறது.
அதற்கு கோவிந்தராஜ், என் மகன் தான், இந்த வீடு தான், மகனை அழைக்கட்டுமா எனக்கேட்டுள்ளாா். உடனே அந்த நபா், வேறு ஒரு பெயரை கூறிய படி வீட்டிற்குள் செல்ல முயன்றாா். இதனால் சந்தேகமடைந்த கோவிந்தராஜ் அவரை தடுத்துள்ளாா்.
உடனே மூதாட்டி பூலோகஅம்மாள் கதவை அடைக்க முயன்றுள்ளாா். அப்போது அந்த நபா், பூலோகஅம்மாள் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து பூலோகஅம்மாள் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.