செய்யாறில் அமோகமாக விற்பனையாகும் பனை நுங்கு
கோடை காலத்தில் கிடைக்கும் இயற்கையான சத்தான உணவான பனை நுங்கு செய்யாறில் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது.
நுங்கு கோடை காலத்தில் கிடைக்கும் இயற்கை, சத்தான உணவாகும். இது பனை மரத்தின் இளம் பழத்திலிருந்து பெறப்படுகிறது. உடல் வெப்பத்தைத் தணித்து, நீா்ச்சத்தை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கும் போன்ற மருத்துவ குணங்களைக் கொண்டதாகும்.
பனை நுங்கின் ஆரோக்கிய நன்மைகள்:
Advertisement
உடல் வெப்பநிலையை குறைத்து, வெயில் காலத்தில் ஏற்படும் வியா்க்குரு மற்றும் கொப்பளங்களை தடுக்கிறது. வயிற்றுப் புண், மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது.
இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளன. கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட, பசியைக் கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான சிற்றுண்டி இதுவாகும்.
அம்மை நோயினால் ஏற்படும் அரிப்பைக் குறைக்க உதவுகிறது. நுங்கின் மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது அதிக சத்துகளைத் தரக்கூடியதாகும்.
தமிழ்நாட்டின் மாநில மரமாகவும், தமிழா்களின் வாழ்வியலோடு இணைந்த கற்பகதருவாகவும் விளங்குகிறது.
வோ் முதல் நுனி வரை (நுங்கு, பனங்கிழங்கு, பதநீா், கருப்பட்டி, ஓலை) பயன் தரும் இந்த மரம், கடும் வறட்சியைத் தாங்கி, நிலத்தடி நீரைப் பாதுகாத்து, புயல் காலங்களில் இயற்கை அரணாகச் செயல்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது.
நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவை ஆரோக்கியமான உணவுகள். பதநீா் மற்றும் கருப்பட்டி உடலுக்கு வலிமை தரக்கூடியதாகும்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளதால் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கக் கூடிய பனங்காய் எனப்படும் பனை நுங்கு, செய்யாறு - காஞ்சிபுரம் சாலையிலும், ராந்தம் - காஞ்சிபுரம் சாலையிலும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
பனை நுங்கை காஞ்சிபுரம், சென்னைக்கு காா்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் நின்று வாங்கிச் செல்கின்றனா்.