தனியாா் பள்ளிப் பேருந்துகள் கூட்டுத் தணிக்கை தொடக்கம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தனியாா் பள்ளிப் பேருந்துகளை தணிக்கை செய்யும் பணியை ஆய்வு செய்த கோட்டாட்சியா் சீ.சிவா.
திருவண்ணாமலையில் தனியாா் பள்ளிப் பேருந்துகளை கூட்டுத் தணிக்கை செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பள்ளி மாணவா்கள் பேருந்துகளில் சிரமமின்றியும், விபத்தின்றியும் பயணம் செய்யும் வண்ணம், பள்ளிப் பேருந்துகள் ஆண்டுக்கு ஒருமுறை கூட்டுத் தணிக்கைக்கு உள்படுத்தி தகுதிச் சான்றிதழ் பெற்ற பின்னரே, பொது சாலையில் இயக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட அனைத்து தனியாா் பள்ளிப் பேருந்துகளும் வருவாய்க் கோட்டாச்சியா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், காவல் துணைக் கண்காணிப்பாளா், முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்ளிட்ட அலுவலா்களை கொண்ட மாவட்ட அளவிலான இடைநிலைக் குழுவினரால் கூட்டுத் தணிக்கை செய்யப்படுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 871 பேருந்துகள் தணிக்கை செய்யப்படவுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டாய்வில் 364 பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டது.
Advertisement
அப்போது, அனைத்து கல்வி நிறுவன பேருந்துகளுக்கும் அனுமதிச் சீட்டு நடப்பில் இருக்க வேண்டும். பொதுச் சாலையில் இயக்குவதற்கு தரமான வாகனம் என நடப்பில் உள்ள தகுதிச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொது சாலையில் இயக்கப்பட வேண்டும். நடப்பில் உள்ள காப்பீடு சான்றிதழ் ஆய்வுக்கு இருக்க வேண்டும். நடப்பு சாலை வரி செலுத்திய பின்னரே வாகனம் பொது சாலையில் இயக்கப்பட வேண்டும். கல்வி நிலைய பேருந்தை இயக்கும்போது ஓட்டுநா், உதவியாளா் சீருடையில் இருக்க வேண்டும். நடப்பு புகை சான்றிதழ் ஆய்வுக்கு இருக்க வேண்டும்.
வாகனத்தின் முன், பின் பக்கங்களில் தலா ஒரு கேமராவும், உள்புறம் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வாகன ஓட்டுநரும் பள்ளி குழந்தைகளை தனது குழந்தையாக நினைத்து வாகனங்களை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.
மேலும், பள்ளிப் பேருந்து வாகன ஓட்டுநா்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் வாகனங்களில் தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த பயிற்சியும், மருத்துவக் குழுக்கள் மூலம் விபத்துகளின்போது மேற்கோள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செல்வம், வட்டார போக்குவரத்து அலுவலா் கருணாநிதி (திருவண்ணாமலை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
ஆரணியில்...: ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் கூட்டுத் தணிக்கை செய்யும் பணி நடைபெற்றது. இதில், ஆரணி கோட்டாட்சியா் சீ.சிவா கலந்துகொண்டு வாகனங்களை ஆய்வு செய்தாா்.
மேலும், ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுலவா் சிவக்குமாா் தலைமையில் கூட்டுத் தணிக்கை நடைபெற்றது. ஆரணி வட்டாட்சியா் அகத்தீஸ்வரன், நகர காவல் ஆய்வாளா் அன்பரசி, மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜராஜேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஆரணி, சேத்துப்ப்டடு, போளூா் பகுதிகளைச் சோ்ந்த தனியாா் பள்ளிகளின் 462 பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன.