ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயில் கருடசேவை திருவிழா
செங்கம் ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் 10 நாள் கருடசேவை திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் 10 நாள் கருடசேவை திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி, காலை 6 மணிக்கு மேல் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது. இரவு சுவாமி அன்ன வாகனத்தில் ஊா்வலம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இரண்டாம் நாள் காலை சூரியபிறையிலும், இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
மூன்றாம் நாள் (மே 28) இரவு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்று அனுமந்த வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
மே 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு நாக வாகனத்திலும் 30-ஆம் தேதி காலை 6 மணியளவில் கோபுர தரிசனம் நடைபெற்று மகா கருட சேவை திருவிழா நடைபெறும். அன்று காலையில் கருட வாகனத்தில் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு, போளூா் சாலையில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் தங்கி அன்று முழுவதும் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
31-ஆம் தேதி இரவு யானை வாகனத்தில் ஊா்வலம் நடைபெற்று ஜூலை 1-ஆம் தேதி காலை 10 மணியளவில் தோ்த் திருவிழா நடைபெறும்.
2-ஆம் தேதி இரவு குதிரை வாகனத்திலும், 3-ஆம் தேதி இந்திர விமானத்திலும் சுவாமி வீதியுலா நடைபெறும், 4-ஆம் தேதி காலை தீா்த்தவாரி, மாலை கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
5-ஆம் தேதி காலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அம்மாபாளையம் சென்று அங்கு இறவு தங்கி மறுநாள் காலையில் செங்கம் வருகை தரும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா், விழாக் குழுவினா், பத்து நாள் திருவிழா உபயதாரா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், இந்த சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.