முகப்பு
வேலூர்

இன்று 228-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திருப்பத்தூர் கோட்டம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கோட்டம் உருவாகி இன்றுடன் (நவம்பர்  30)  227 ஆண்டுகள் நிறைவடைகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கோட்டம் உருவாகி இன்றுடன் (நவம்பர்  30)  227 ஆண்டுகள் நிறைவடைகிறது.
 பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு அரசர்களின் ஆட்சியிலிருந்த இப்பகுதியானது நவம்பர் 30, 1790-ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆளுகையின்கீழும், 15 ஆகஸ்ட் 1947-ஆம் ஆண்டு  முதல் சுதந்திரமடைந்து இந்தியக் குடியரசின் ஒரு பகுதியாக மக்களாட்சியின் கீழும் தொடர்ச்சியான ஒரு நிர்வாக அமைப்பாக திருப்பத்தூர்  கோட்டம் இருந்து வருகிறது.
 முதலில் ஆட்சியர் கேப்டன் கிண்டர்ஸ்லே தலைமையில் மாவட்டமாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், பின்னர் ஏப்ரல் 4, 1972 முதல் கேப்டன் அலெக்ஸாண்டர் ரீட் தலைமையிலான சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது.
 பின்னர், ஆட்சியரின் நேரடி ஆளுகையிலும், அதைத் தொடர்ந்து சார்-ஆட்சியராலும் நிர்வகிக்கப்படும் ஒரு கோட்டமாகவும் மாற்றப்பட்டது. ஏப்ரல் 1, 1911-இல் வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகள் வேலூரை தலைமையிடமாகக் கொண்ட வட ஆற்காடு மாவட்டமாகவும், சித்தூர் பகுதி சித்தூர் மாவட்டமாவும் பிரிக்கப்பட்டது. 
அன்று முதல் வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகள் இருந்து வருகின்றன.
ஊர் பெயர் காரணம்...
 ஆதியூர் முதல் கோடியூர் வரை பத்து ஊர்களைக் கொண்ட நகரம் திருப்பத்தூர் என அழைக்கப்படுகிறது. வணிகம், தொழில், விவசாயம், ஆன்மிகம் என இப்பகுதி பெருமை வாய்ந்தது.
அப்போதே 
மாவட்ட அந்தஸ்து...
 30.11.1790-இல் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் உருவானது. அதன் முதல் ஆட்சியராக கிண்டர்ஸ்லே நியமிக்கப்பட்டார். பின்னர், ஏப்ரல் 4, 1792 அன்று திருப்பத்தூர் மாவட்டம், சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் ஆட்சியராக கேப்டன் அலெக்ஸாண்டர் ரீட் நியமிக்கப்பட்டார். அவரது காலகட்டமான ஜூலை 7, 1799 வரை ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தலைமையிடமாக திருப்பத்தூர் நகரம் இருந்து வந்தது. ஆட்சியர் திருப்பத்தூரிலிருந்து சேலம் மாவட்டத்தையும் நிர்வகித்து வந்தார்.
விவசாயம் செய்யும் ஆர்வம் விவசாயிகளுக்கு வரவேண்டுமென ரயத்துவாரி முறையை (அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வசூல் செய்யும் முறை) சென்னை மாகாணத்தின் ஆளுநராக பொறுப்பேற்றவுடன் தமிழகம் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தினார். அதற்கான விதை அன்று திருப்பத்தூர் பகுதியில் தான் அவர் உள்ளத்தில் உதித்தது.
முதல் பெண் ஐஏஎஸ் இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னாஜார்ஜ் (எ) அன்னா ராஜம் மல்கோத்ரா ஆட்சியராக இருந்தார். இவர் குதிரை மேல் ஏறி ஒவ்வொரு ஊருக்கும், மலைப் பகுதிகளுக்கும் சென்று மக்கள் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு கண்டார். 
தமிழகத்தின் முதல் பெண் தலைமை செயலராகிய லட்சுமி பிரானேஷ், பிரதமரின் முதன்மைச் செயலராக பணிபுரிந்த டி.வி.சோமநாதன் என பலர் இங்கு சார்-ஆட்சியராக பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 நகரில் தற்போது உள்ள  சார்-ஆட்சியர் கட்டடம் 1886-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
இத்துணை பெருமைவாய்ந்த திருப்பத்தூர் கோட்டம் உருவாகி இன்றுடன் (30.11.2017) 227-ஆவது ஆண்டுகள் நிறைவடைகிறது.

திருவிழாவில் இன்று...!
தீபத் திருவிழாவின் 8 -ஆம் நாளான வியாழக்கிழமை மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெறுகின்றன. மாலை 4.30 மணிக்கு தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு குதிரை வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →