முகப்பு
வேலூர்

தேசிய நெடுஞ்சாலைகளில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்கப்படுமா

தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:38 PM
பகிர்:

தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. 1988-ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையச் சட்டம் உருவாக்கப்பட்டது. 
1995-ஆம் பிப்ரவரியில் இந்த ஆணையம் மத்திய அரசின் தன்னாட்சிநிலையை பெற்றது. நாட்டில் பல மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. இதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
மதுரை நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை குறித்த பொதுநல வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதிகள் சில ஆலோசனைகளை வழங்கினர். 
அதில், அவசரகால சிகிச்சைக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை சுங்கச்சாவடிகளில் நிறுத்தி வைக்க வேண்டும். அவசரகால வாகனங்களுக்கான தனி வழியை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
அதன் வழியில் அவசரகால வாகனங்கள் வந்து செல்லும் வகையிலும், போக்குவரத்தைச் சரி செய்யவும் ஒரு காவலரை தனியாக பணியமர்த்த வேண்டும். 
தனி வழி குறித்து குறிப்பிட்ட தொலைவுக்கு முன்னரே அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினர். 
அதில், சுங்கச்சாவடி மையத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளதா?, மீட்பு வாகன வசதி உள்ளதா?, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?, அனைத்து சுங்கச்சாவடி மையங்களிலும் கழிப்பறை வசதி உள்ளதா? என்று கேட்டிருந்தனர்.
காலதாமதம் ஏன்?
தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான விபத்துகள் நிகழ்கின்றன. இதில் பலர் நிகழ்விடத்திலேயே உயிரிழக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர்.
விபத்தில் சிக்கியவர்களைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக காத்திருந்து பின்னர், மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். 
இந்த காலதாமதத்தால் பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழக்கின்றனர்.
எனவே, சுங்கச்சாவடியில் இருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைத்தால் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களைக் காப்பாற்ற முடியும். எனவே அரசும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் இப்பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
* விபத்தில் சிக்கியவர்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக காத்திருந்து பின்னர், மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த காலதாமதத்தால் பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழக்கின்றனர்.எனவே, சுங்கச்சாவடியில் இருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைத்தால் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களைக் காப்பாற்ற முடியும்.*

முழு கட்டுரையைப் படிக்க →