பூட்டியே வைக்கப்பட்டுள்ள "கிராம சேவை மையங்கள்'
கிராமங்களில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மையங்கள் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.
கிராமங்களில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மையங்கள் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. அவை ஊராட்சிக்குச் சொந்தமான பொருள்களை வைக்கும் கிடங்குகளாக மாறிவருகின்றன.
ஒரு நாட்டின் வளம் கிராமங்கள் தான் என்பதால் "கிராம ராஜ்யம் "என்ற பெயரிலும், "பஞ்சாயத்து ராஜ் " என்ற பெயரிலும் பல்வேறு திட்டங்கள் நம் நாட்டில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரப்படுகின்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்று வரும் பணிகள், அது தொடர்பான பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் வருகையை உறுதி செய்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பது, வரியினங்கள் வசூல் செய்வது, பல்வேறு சான்றிதழ்கள் வழங்குவது ஊராட்சி செயலாளரின் பணியாகும். ஊராட்சிகளில் வருவாய் கிராமங்களில் பணிபுரிபவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவர்.
இந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பிறப்பு, இறப்பை உறுதி செய்து சான்றிதழ்களை வழங்குவது, ஜாதி, வருமானம், இருப்பிடம், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்க பரிந்துரைக்கும் பணியையும், வீட்டு வரி, நில வரி உள்ளிட்ட வரிகள் வசூல் செய்யும் பணிகளையும் செய்து வருகின்றனர்.
எனவே ஒவ்வொரு கிராமத்துக்கும் ஊராட்சி செயலாளரும், கிராம நிர்வாக அலுவலரும் இரு கண்களாக இருந்து செயல்பட்டால் மட்டுமே அந்த ஊராட்சி வளர்ச்சி காணமுடியும்.
தற்போது அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக ஏடுகளில் எழுதி வைக்கும் முறை மாற்றப்பட்டு, கணினி மூலம் தகவல்கள் சேகரித்து வைப்பது, அதையே அப்படியே இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்வது, பதிவிறக்கம் செய்து கொள்வது என தகவல் பரிமாற்ற சேவைகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டணங்கள் செலுத்துவது, சான்றிதழ்கள் பெற விண்ணப்பம் செய்வது, முன் பதிவு செய்வது என பலதுறைகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது.
நகரங்களில் உள்ள கணினி மையங்களை தேடி கிராம மக்கள் பல கி.மீ. தொலைவு பயணம் செய்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஏற்படும் சிரமத்தை போக்க உருவாக்கப்பட்டதே "கிராம சேவை "மையங்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்திய, மாநில அரசுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் "சஹாஜ் சேவை மையங்கள் " தொடங்கப்பட்டு, தனிநபர்கள் மற்றும் சுய உதவி குழுக்களால் செயல்பட்டு வந்தன. அந்த சேவை மையங்கள் சில ஊராட்சிகளில் முறையாக செயல்பட்டும், சில ஊராட்சிகளில் செயல்படாமலும் போனதால், அரசே முறையாக நிரந்தர கட்டமைப்புகளை ஏற்படுத்தி, இணையதளம் உள்ளிட்ட சேவைகளை ஏற்படுத்தியது. அதற்கான பணியாளர்களை நியமனம் செய்து கிராம மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கவே "கிராம சேவை மைய கட்டடங்கள் " கட்டப்பட்டன.
ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் இந்த "கிராம சேவை மையங்களை முறையாக நிர்வகிக்க ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனித்தனியே அறைகள் இதில் உள்ளன. அதேபோல் இணையதள வசதிகளையும், கணினி, சான்றிதழ்களை பிரதியெடுக்கும் இயந்திரங்கள் பயன்படுத்துவதோடு, பணியாற்றும் பணியாளருக்கும் தனி அறை உள்ளது.கிராம சேவை மைய கட்டடத்தின் மேல் இணையதள வசதிக்காக ஆன்டெனா பொருத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் இது போன்ற "கிராம சேவை மையங்கள் திறம்பட செயல்பட்டு வரும் நிலையில், தமிழக கிராம சேவை மையங்கள் ஊராட்சிக்குச் சொந்தமான பொருள்களை போட்டு வைக்கும் கிடங்குகளாய் மாறி வருவது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
வரும் காலங்களில் இந்த கிராம சேவை மையங்களுக்கு தனியாக பணியாளரை நியமிக்க வேண்டும். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் எனும் புதுவாழ்வு திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவின் ஊக்குநர்களை கொண்டு இந்த கிராம சேவை மையங்களை நிர்வகிக்கலாம். இந்த சேவை மையங்கள் ஊராட்சி பகுதிகளில் திறம்பட செயல்பட தொடங்கினால் வீட்டு வரி, நிலவரி, தொழில் வரி, மின் கட்டணம், பட்டா, சிட்டா, அடங்கல், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், செல்லிடப்பேசி ரீசார்ஜ் உள்ளிட்ட அனைத்து இணையதள வசதிகளையும் ஊரக பகுதி மக்கள் பெறுவர். அதே சமயம் சேவை கட்டணமாக மக்களிடம் இருந்து பெறும் தொகை அதை நிர்வகிக்கும் பணியாளருக்கு ஊதியமாக கிடைத்துவிடும். அதனால் அந்த பணியாளரை ஊராட்சியின் கூடுதல் பணியாளராக பயன்படுத்திக் கொள்ளலாம். கிராம சேவை மையத்தில் கிடைக்காத இது போன்ற சேவைகளை தேடி நகர பகுதிகளுக்கு கிராம மக்கள் தனியார் நடத்தும் கணினி மையங்களை நாடி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
எனவே உடனடியாக ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம சேவை மையங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஊரக பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.