முகப்பு
வேலூர்

திருப்பத்தூரில் அறிவிப்புப் பலகை இல்லாததால் கனரக வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூரில் கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:

திருப்பத்தூரில் கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
வேலூர் மாவட்டத்தின் 2-ஆவது பெரிய நகரம் திருப்பத்தூராகும். இங்கு சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சார்-ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வன அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், தொலை தொடர்புத் துறை அலுவலகம், அஞ்சலகம், அரசு மருத்துவமனை என மாவட்ட தலைநகருக்கு அடுத்தபடியாக அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. 
திருப்பத்தூர் வழியாக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான பேருந்துகள், சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. நகரின் பிரதான சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், திருப்பத்தூர் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படும். இதனால், பாதசாரிகள் மட்டுமன்றி வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு தினமணியில் செய்தி வெளியானதை அடுத்து நகருக்குள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சரக்கு லாரிகள் செல்லக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன. பின்னர், இந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதியிலிருந்து காலை 6 மணி முதல் 11 மணி வரை வெளியூர் லாரிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், இரவு 9 மணிக்கு மேல் லாரிகள் நகர் வழியாக இயக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், தற்போது சரக்கு லாரிகள் தடையை மீறி எந்நேரமும் நகர் வழியாக செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக  வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். 
மேலும், கனரக வாகனங்கள் செல்ல புதிதாக அறிவிக்கப்பட்ட நேரத்துக்கான அறிவிப்புப் பலகைகள் இதுவரை வைக்கப்படவில்லை. இதனால் லாரி ஓட்டுநர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பராமரிப்பு இல்லாத சிக்னல் விளக்குகள்... கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நகரக் காவல் நிலையம், சேலம்-கிருஷ்ணகிரி பிரதான சாலை, கிருஷ்ணகிரி-தருமபுரி பிரதான சாலைகளில் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் விளக்குகள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன. சிக்னல் விளக்குகள் இயங்காததால் வாகன ஓட்டிகள் தாறுமாறாகச் செல்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
சிக்னல் கம்பங்கள் விளம்பரப் பலகைகளைத் தொங்கவிடுவதற்கு மட்டுமே பயன்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
எனவே, சிக்னல் விளக்குகளைப் பராமரித்து, மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும். அதேபோல், கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்லும் நேரம் குறித்து அறிவிப்புப் பலகைகள் வைக்க போக்குவரத்துத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →