வேலூர்

திமுகவின் வெற்றி வாய்ப்பை தடுக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

DIN


வருமான வரிச் சோதனை நடத்தி வழக்குகளைப் பதிவு செய்வதன் மூலம் திமுகவின் வெற்றி வாய்ப்பைத் தடுக்க முடியாது. மக்களவைத் தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றுவது போல், பேரவை இடைத் தேர்தலில் 22 இடங்களிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த், குடியாத்தம் பேரவைத் தொகுதி வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து குடியாத்தத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை பேசியது:
கோடை வெயில் உக்கிரத்தைவிட மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சி மிகக் கொடுமையானது. இவ்விரு ஆட்சிகளுக்கும் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தல்,  பேரவை இடைத்தேர்தல் மூலம் முடிவுகட்ட வேண்டும்.
பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இதன்மூலம், சட்டப்பேரவையில் திமுக கூட்டணியின் பலம் 119-ஆக அதிகரிக்கும்போது மத்திய பாஜக அரசைப் போல், மாநிலத்தில் அதிமுக அரசும் அகற்றப்படும். இது நடந்துவிடக் கூடாது என்பதற்காக திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் திட்டமிட்டே வருமான வரிச் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்திருப்பதன் மூலம் வேலூர் மக்களவைத் தொகுதியுடன் ஆம்பூர், குடியாத்தம் பேரவை இடைத்தேர்தல்களைத் தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். 
அதிமுக அரசு மீது எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் எங்கேயோ எடுத்த பணத்தையும், அதுவும் அவர்களாக வைத்துவிட்டு, எடுத்த பணத்தைக் கொண்டு திமுக வெற்றியைத் தடுக்க முடியும் என கணக்கு போடுகின்றனர். அது ஒருபோதும் நடக்காது. மக்களவைத் தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றுவது போல், பேரவை இடைத்தேர்தலில் 22 இடங்களிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. 
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி கூறிய எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கும், 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கும் வேலை அளிப்பதாகக் கூறினார். 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் அப்படி யாருக்கும் வேலை அளிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 15 லட்சம் செலுத்துவதாகக் கூறிய பிரதமர், 15 பைசாகூட செலுத்தவில்லை. விவசாய வருவாயை 2 மடங்காக உயர்த்துவதாகக் கூறிய வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. 
இதேபோல், கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.க்கள், 5 ஆண்டுகளில் மக்களவையில் தமிழக நலனுக்காக குரல் எழுப்பியதே இல்லை. குறிப்பாக, நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழையவிட்டதன் மூலம் ஏழை, சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கான மசோதா காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான் என்றாலும், அத்தேர்வை தமிழகத்துக்குள் வராமல் தடுத்திருந்தது திமுகதான். எனவே, திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இதை திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளிலேயே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். 
அதேசமயம், நீட் தேர்வு வரக் காரணமான அதிமுகவும், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள பாமகவும் நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறியிருப்பது வேடிக்கை. எனவே, ஏழை மாணவர்கள் மருத்துவராக முடியாமல் தடுத்திருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

SCROLL FOR NEXT