வேலூரில் ஏஐடியுசி மாநில மாநாடு தொடக்கம்: தொழிலாளர்கள் பேரணி
ஏஐடியுசி மாநில மாநாடு வேலூரில் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏஐடியுசி மாநில மாநாடு வேலூரில் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி-இன் 19ஆவது மாநில மாநாடு தொரப்பாடியில் உள்ள அழகாம்பாள் திருமண மண்டபத்தில் புதன்கிழமை தொடங்கியது. இம்மாநாடு தொடர்ந்து மூன்று தினங்களுக்கு நடைபெறுகிறது. தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.21 ஆயிரத்துக்கும் குறையாத அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கவும், ரூ.6 ஆயிரத்துக்கு குறையாத ஓய்வூதியம் வழங்கவும், தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு சீர்குலைப்பதைத் தவிர்க்கவும், உடலுழைப்பு, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியங்களை இயங்கச் செய்யவும் வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நாளான புதன்கிழமை மாலையில் பேரணி நடைபெற்றது. வேலூர் நேஷனல் ரவுண்டாணா பகுதியில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை நடைபெற்ற பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக, பெரியார் திடல் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநாட்டு வரவேற்புக்குழு சிறப்புத் தலைவர் ஏ.சி.சாமிக்கண்ணு தலைமை வகித்தார். ஏஐடியுசி அகில இந்திய பொதுச் செயலர் அமர்ஜீத் கௌர் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அடுத்ததாக, இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பொது மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழக ஏஐடியுசி தலைவர் கே.சுப்பராயன் இதற்குத் தலைமை வகிக்கிறார். தொழிற்சங்க முன்னோடிகளின் உருவப்படங்களை மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணு திறந்து வைக்கிறார்.
வரவேற்புக் குழு தலைவர் சி.ஜி.ராஜாராம் வரவேற்கிறார். அமர்ஜீத் கௌர் தொடக்க உரையாற்றுகிறார். பின்னர், அறிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை விவாதத் தொடர்ச்சி நடைபெறும். மாலையில் தீர்மானங்கள் முன்மொழியப்பட உள்ளன. அதன் பின் தா.பாண்டியன் நிறைவுரையாற்றுவார். ஏற்பாடுகளை ஏஐடியுசி மாநில மாநாட்டு வரவேற்புக் குழு செய்துள்ளது.