வேலூர்

வேலூர் கிராமங்களில் உள்ள நீர் செறிவூட்டும் கிணறுகள் திட்டத்துக்கு பிரதமர் பாராட்டு

DIN

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேலூர் மாவட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டு வரும் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி வட்டார கிராமங்களில் 50 முதல் 70 அடி மட்டத்தில் திறந்தவெளிக் கிணறுகளில் கூட தண்ணீர் கிடைத்து வருகிறது. தவிர, கோடையிலும் அங்கு நெல், வாழை உள்ளிட்ட தண்ணீர்த் தேவை அதிகமுள்ள பயிர்களின் சாகுபடி இயல்பாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதற்கு கணியம்பாடி வட்டாரத்திலுள்ள நாகநதி என்ற சிறு ஓடையின் குறுக்கே 349 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள்தான் காரணம்.
மழைக்காலங்களில் இந்த ஓடையில் வரும் தண்ணீர் வீணாக ஏரி, குளம், குட்டைகளில் தேங்கி ஆவியாவதைத் தடுத்து நேரடியாக பூமிக்குள் செலுத்தக்கூடிய நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைக்கும் பணி திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாற்றம்பள்ளி, பேர்ணாம்பட்டு, ஆலங்காயம், குடியாத்தம், கந்திலி, மாதனூர், அணைக்கட்டு என மாவட்டத்தில் மேலும் 9 வட்டாரங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களைக் கொண்டு இந்த 9 வட்டாரங்களில் 3,768 கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வானொலியில் மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது, தண்ணீர்ப் பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசு அமைத்துள்ள நீர்வளத் துறை குறித்து பேசிய அவர், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் செறிவூட்டும் கிணறுகள் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்தார். தண்ணீர் பிரச்னையை சமாளிக்க கிராமப் பெண்கள் மூலம் செயல்படுத்தி வரும் இத்திட்டம் குறித்து கவனித்து வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT