வேலூர்

தண்ணீரின்றிக் கருகிய தென்னை, நெல், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.30 கோடி இழப்பு: வறட்சி நிவாரணம், காப்பீட்டுத் தொகை வழங்கப்படுமா?

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழைப் பொழிவில்லாமல் கடும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள வேலூர்

பெ.பாபு

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழைப் பொழிவில்லாமல் கடும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள வேலூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் வறண்டதால் விவசாயிகளுக்கு சுமார்ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணத் தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையையும் உடனடியாக வழங்கினால் தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலாறு, நீவா நதி எனும் பொன்னை ஆறு ஆகிய இரண்டு வற்றாத ஜீவ நதிகள் பாய்ந்தோடி வளம் கொழித்தது வேலூர் மாவட்டத்தில். அப்போது மாவட்டம் முழுவதும் விவசாயமும், தொழில் துறையும் செழிப்பாக இருந்ததற்குச் சான்றுகள் பல உண்டு. ஆனால் தற்போது பாலாறும், பொன்னை ஆறும் வறண்டு பாலைவனமாகிவிட்ட சூழலில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழைப் பொழிவு இல்லாமல் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது வேலூர் மாவட்டம்.
தமிழகத்திலேயே அதிகப்படியாக வேலூர் மாவட்டத்தில்    112 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலால் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசி மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவிவரும் சூழலில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு பல தடுப்பணைகளைக் கட்டியதாலும், ஆறுகளில் நடந்துவரும் மணல் கொள்ளையாலும் நிலத்தடி நீர் மட்டம்  வெகுவாகக் குறைந்து பாசனக் கிணறுகளும், ஆழ்துளைக் கிணறுகளும் நீரின்றி வறண்டு விட்டன. இதனால் குடிநீருக்கும்,  விவசாயத்துக்கும் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் மாவட்டம் முழுவதும் ஆழ்துளைக் கிணறு மூலம் கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரைப் பயன்படுத்தி, கடன் வாங்கிப் பயிரிட்ட நெல், கரும்பு,வாழை, மக்காச்சோளம்,  வேர்க்கடலை,  கத்தரி,  தக்காளி,  மிளகாய் மற்றும் தென்னை, மா உள்ளிட்ட அனைத்துப்  பயிர்களும் தண்ணீர்  இன்றி காய்ந்து கருகி விட்டன.
இதில் நெல் சுமார் 700  ஏக்கரிலும், கரும்பு சுமார் 400 ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளன. நெல் பயிராகி வந்தால் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் கிடைக்கும். ஆனால் நெற்பயிர் முழுவதும் வறண்டுவிட்டதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 700 ஏக்கருக்குத் தலா ரூ.35 ஆயிரம் வீதம் ரூ.2.45 கோடி.
இதேபோல பணப்பயிரான கரும்பு சுமார் 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது. கரும்பு பயிர் வறண்டுவிட்டதால் இதன் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வீதம்  ரூ.3.20 கோடி.
வாழ்நாள் பயிரான தென்னை காட்பாடி மற்றும் வாலாஜாபேட்டை தாலுகாக்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் தென்னைகள் வறட்சியின் கோரத் தாண்டவத்துக்குத்தாக்குப் படிக்க முடியாமல் மடிந்துவிட்டன. இவை அனைத்தும் குறைந்தது மேலும் 50 ஆண்டுகளுக்குப் பலன் தர இருந்தன. இவை மடிந்ததால் மரத்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் கணக்கிட்டால் ரூ.20 கோடி.
வறட்சியால் விவசாயிகள்  பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமலும், கடனை திருப்பிச் செலுத்த முடியாமலும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுக்கும் பரிதாப நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக, காட்பாடி வட்டம், பொன்னை, வள்ளிமலை, மேல்பாடி,  பள்ளேரி  மற்றும்  வாலாஜாபேட்டை வட்டம் வேலம், மேல்வீராணம், ரெண்டாடி, உள்ளிட்ட  சுற்றுவட்டாரப்  பகுதிகளில் அனைத்து விவசாய விளைபயிர்களும் வறட்சியால் காய்ந்து கருகியதால், அந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் கால்நடைகளுக்காவது தீவனமாகட்டுமே என தாங்களின் கால்நடைகளை மேய விட்டு வருகின்றனர்.
மேலும் கால்நடைகளுக்கும் உரிய தீவனம் இன்றி அடிமாடுகளாக விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் வருவாய் இன்றி வாழ்வாதாரத்தை தொலைத்து தவித்து வருகின்றனர்.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் கடும் வறட்சியால் கருகிய பயிர்களை கணக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் உடனடியாக நஷ்ட ஈடும், வறட்சி நிவாரணமும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இது தொடர்பாக தமிழக விவசாய சங்கத்தின் வேலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் பள்ளேரி ராஜா  "தினமணி'  நிருபரிடம் கூறியது. 
பொதுவாகவே வேலூர் மாவட்டம் கடும் வறட்சியில் சிக்கியுள்ளது. இம்முறை வறட்சியால் நெல், கரும்பு மற்றும் தென்னை ஆகியவை காய்ந்துவிட்டன. இது தொடர்பாகக் கணக்கெடுத்து பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை,  வறட்சி நிவாரணத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். இதில் காலம் தாழ்த்தினால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்று தெரிவித்தார். அரசு காலம் தாழ்த்தாமல் இத்தொகைகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT