திருப்பதி: திருமலையில் வாகனங்களில் ஒலியெழுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பதி நகர்புற காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்ரெட்டி தெரிவித்தார்.
திருமலையில் உள்ள கருடாத்திரி நகர் சோதனை சாவடியில் இன்று மாலை நடந்த நிகழ்ச்சியின் போது அவர் மேலும் கூறியதாவது. 'திருமலை மிகவும் புனித தன்மை வாய்ந்த இடம். பல மகரிஷிகளும், முனிபுங்கவர்களும், சித்தர்களும் தவம் இடமாக கருதப்படுவதால் இயற்கையாகவே இந்த இடத்தில் நல்ல அதிர்வலைகள் உண்டு. ஏழுமலையான் கோயிலில் நடக்கும் அதிகாலை முதல் கைங்கரியமான சுப்ரபாதம் முதல் நள்ளிரவு நடக்கும் ஏகாந்த சேவை வரை கூறப்படும் மந்திரங்கள் ஒலிபெருக்கி வாயிலாக ஒலிபரப்பப்படுகிறது.
ஓம்காரம் ஒலிக்கும் திருமலையில் வானகங்களின் ஒலிப்பான் ஏற்படுத்தும் ஒலிகள் அதை பாதித்து வருகிறது. கடந்த 3 மாத காலங்களாக பொது முடக்கம் அமலில் இருந்த காலகட்டத்தில் பல்லாண்டுகளுக்கு பின் நாடு முழுவதும் அமைதியை உணர்ந்தது. இந்த அமைதியை பக்தர்களும் உணர வேண்டும் என்று திருமலையில் முதல் முறையாக வாகனங்கள் ஒலியெழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அது இன்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே நாடு முழுவதிலும் இருந்து வாகன ஓட்டிகள் திருமலைக்கு வருகின்றனர்.
அவர்கள் சுயகட்டுப்பாட்டுடன் இதை கடைபிடித்தால் திருமலையின் அமைதியை அனைவரும் உணர முடியும். இதுகுறித்து திருமலைக்கு வரும் வாகனங்களுக்கு தெரியபடுத்தும் வகையில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் தனியார் வாகன ஓட்டிகளுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட உள்ளது. அனைவரும் சுயகட்டுப்பாட்டுடன் இதை பின்பற்ற வேண்டும். விரைவில் திருப்பதியிலும் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது’, என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.