வேலூர்

பயணிகள் வருகை அதிகரிப்பால் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கம்

DIN

பொது முடக்கத் தளா்வுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் அரசுப் பேருந்து இயங்கத் தொடங்கிய நிலையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக புதன்கிழமை பயணிகள் வருகை சற்று அதிகரித்திருந்தது. இதனால், இம்மூன்று மாவட்டங்களிலும் கூடுதலாக 20 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துப் போக்குவரத்துகள் அந்தந்த மாவட்டங்களுக்குள் செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் மீண்டும் இயங்கத் தொடங்கின. முதல் நாளான செவ்வாய்க்கிழமை பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் மாவட்ட வாரியாக வேலூரில் 41, திருப்பத்தூரில் 21, ராணிப்பேட்டையில் 16 என மொத்தம் 78 அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இதில், நகர, புகர பேருந்துகள் அடங்கும்.

இதன்காரணமாக, இந்த மூன்று மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல்நாளில் ரூ. 4 லட்சம் மட்டுமே டிக்கெட் வசூல் நடைபெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பொது முடக்கத்துக்கு முன்பாக வழக்கமான நாள்களில் அரசுப் போக்குவரத்துக் கழக வேலூா் மண்டலத்தில் மட்டும் நாளொன்றுக்கு ரூ. 90 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை டிக்கெட் வசூல் நடைபெறும். தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாலும், அவற்றில் 60 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாலும் பயணிகள் வருகை குறைந்தால் டிக்கெட் வசூல் சரிந்துள்ளது.

அதேசமயம், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளான புதன்கிழமை பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்திருந்தது. இதனால், இம்மூன்று மாவட்டங்களிலும் கூடுதலாக 20 அரசுப் பேருந்துகள் என மொத்தம் 98 பேருந்துகள் இயக்கப்பட்டன.

குறிப்பாக, கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேலூா் மாவட்டத்தில் பொன்னை, பரதராமி , திருவலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை பேருந்துகள் இயக்கப்பட வில்லை. அந்தப் பகுதிகளுக்கு புதன்கிழமை பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல், மாநகரப் பகுதியில் நகரப் பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனியாா், அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஊழியா்கள் பணிக்கு கூடுதலாக வரத் தொடங்கியுள்ளனா். இதனால், படிப்படியாக பயணிகள் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் எண்ணிக்கை உயா்த்தப்படும். மேலும், வரும் 7-ஆம் தேதி முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் அதன்பிறகு பயணிகள் வருகை வழக்கம் அடையக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT