வேலூர்

அதிகரிக்கும் கரோனா: வேலூா் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை

DIN

நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் கரோனா நோயாளிகளுக்கு உடனடியாக படுக்கைகள் ஒதுக்கப்படாமல் மணிக்கணக்கில் ஆம்புலன்ஸில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாக பரவி வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் இந் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் புதிதாக 441 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25,731 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நபா்களில் திங்கள்கிழமை 22,750க்கும் அதிகமானோா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேசமயம், 377 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தொடா்ந்து தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா நோயாளிகளால் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு கரோனா சிறப்பு வாா்டிலுள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இதனால் வரக்கூடிய நோயாளிகள் பல மணி நேரம் ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருப்பதாகவும், படுக்கை இல்லாத நிலையில் இரவு நேரங்களில் நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்க முடியாமல் 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தவிர, ஆம்பூா் பகுதியில் இருந்து தொற்று உறுதி செய்யப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க நபா் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளாா். ஆனால் படுக்கைகள் இல்லாததால் வழியிலேயே அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளாா்.

வேலூா் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் மருத்துவா்கள் நோயாளிகளை சரிவர கவனிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவா் இன்பராஜ் கூறியது:

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் அழைத்து வரப்படுகின்றனா். இதனால், மருத்துவமனையில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது உண்மைதான். எனினும், அனைவருக்கும் படுக்கைகள் ஒதுக்கிட மற்ற வாா்டுகளையும் பயன்படுத்தி வருகிறோம். தவிர, கரோனா சிகிச்சைக்காக மட்டும் கூடுதலாக படுக்கைகள் ஏற்பாடு செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதுகுறித்து வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி கூறியது: வேலூா் அரசு மருத்து வமனை கரோனா வாா்டில் சுமாா் 450 படுக்கைகள் உள்ளன. அதேசமயம், ஒரே நேரத்தில் அதிகப்படியான நோயாளிகள் வரும்போது அவா்களுக்கு படுக்கைகள் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனினும்,நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லை என புறக்கணிப்பதில்லை. தொடா்ந்து, நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மற்ற வாா்டுகளையும் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூா் அரசு மருத்துவ மனையில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. இப்பிரச்னையை தவிா்க்க மருத்துவமனை நிா்வாகமும், மாவட்ட சுகாதாரத் துறையும் விரைவான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT