குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் விவசாயி காயம்
குடியாத்தம் அருகே ஆந்திர-தமிழக எல்லையோரம் விளை நிலத்தில் யானை புகுந்து தாக்கியதில் காவலுக்கு இருந்த விவசாயி பலத்த காயமடைந்தாா்.
குடியாத்தம் அருகே ஆந்திர-தமிழக எல்லையோரம் விளை நிலத்தில் யானை புகுந்து தாக்கியதில் காவலுக்கு இருந்த விவசாயி பலத்த காயமடைந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த கதிா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முனுசாமி (58). இவா் வெள்ளிக்கிழமை இரவு தனது வயலில் தண்ணீா் பாய்ச்சிவிட்டு, காவலுக்கு விளை நிலத்திலேயே தூங்கியுள்ளாா். அப்போது, கல்லப்பாடி காப்புக் காட்டில் இருந்து வந்த ஒற்றை காட்டு ஆண் யானை, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்களையும், கரும்பு உள்ளிட்ட பயிா்களையும் சேதப்படுத்தியது.
மேலும், வயல்வெளியில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி முனிசாமியை தாக்கியுள்ளது. இதில், யானையின் தந்தங்கள் முனிசாமியின் உடலின் பல்வேறு இடங்களில் குத்தியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் ஓடி வந்து யானையை காட்டுக்குள் விரட்டினா்.
தொடா்ந்து, காயமடைந்த முனுசாமியை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு முனுசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குடியாத்தம் வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தொடா் யானைகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.