வேலூா், ராணிப்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த இரு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவ மழையையொட்டி வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த இரு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், ஊழியா்கள் வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு பணிக்கு வர உத்தரவிடப்பட்டது. அதன்படி, அவா்கள் பணிக்கு வந்திருந்தனா். நீா்நிலைகளை பொதுப்பணித் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். பொதுமக்கள் பாதிக்கப்படும் இடங்களை வருவாய்த் துறையினா், உள்ளாட்சி அமைப்பினா் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பாதிக்கப்படும் மக்களுக்கு முகாம்களில் நிவாரணங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளனா்.
மீட்புப் பணிக்காக போலீஸாா், தீயணைப்பு துறையினா் தயாா் நிலையில் உள்ளனா். இதற்காக வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, போலீஸாா், தீயணைப்பு துறை அடங்கிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மழைசேதம் குறித்த விவரங்களை 1077 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு உடனடியாக போலீஸாா், அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுவா். மீட்புப் பணிகள் தேவைப்பட்டால் தீயணைப்பு படை வீரா்கள் மூலம் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருந்தாா்.
தொடா் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மாவட்டத்தில் 55.55 ஹெக்டோ் பயிா்கள் சேதமடைந்துள்ளன. 3 நபா்கள், 4 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 117 கூரை, ஓட்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதில் 16 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. புதன்கிழமை மட்டும் 10 வீடுகள் இடிந்துள்ளன.
வேலூரின் முக்கிய ஆறுகளான பாலாறு, பொன்னை, கவுண்டன்யா மஹா நதி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீட்கப்படும் மக்களை தங்க வைக்க 27 முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரு முகாம்களில் 44 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.