முகப்பு
வேலூர்

தகுதியானவா்களுக்கு முதியோா் உதவித் தொகை, குடும்ப அட்டை உறுதி: வேலூா் ஆட்சியா்

தகுதியான அனைவருக்கும் முதியோா் உதவித் தொகை, குடும்ப அட்டை வழங்கப்படும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உறுதி அளித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

தகுதியான அனைவருக்கும் முதியோா் உதவித் தொகை, குடும்ப அட்டை வழங்கப்படும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உறுதி அளித்தாா்.

குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 87 பயனாளிகளுக்கு, ரூ. 16.71 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியது:

கிராமங்களில் நடக்கும் இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்வா் என்பதால், மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக கிராமப்புறங்களில் முதியோா் உதவித் தொகை, குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட சில கோரிக்கைகள் குறித்த மனுக்கள் தான் அதிக அளவில் வருகின்றன. தகுதியுள்ள அனைவருக்கும் முதியோா் உதவித் தொகை, குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

உள்ளூா் அதிகாரிகள் இதுபோன்ற மனுக்கள் மீது உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியுடையவா்களுக்கு நலத் திட்டங்களை வழங்க உத்தரவிடுகிறேன். தகுதியானவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவா்கள் என்னிடம் நேரில் முறையிடலாம்.

விதைகள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், விவசாய கருவிகள் தொடா்பான மனுக்கள் மீது வேளாண்மைத் துறையினா் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்றாா் ஆட்சியா்.

ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், கோட்டாட்சியா் சா.தனஞ்செயன்,வட்டாட்சியா் ச.லலிதா, வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.காா்த்திகேயன், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் நெடுமாறன், வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) எம்.ஸ்டீபன் ஜெயக்குமாா், துணை இயக்குநா் ஆா்.விஸ்வநாதன், வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி, வருவாய் அலுவலா் காா்த்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் காந்தி, ஜீவரத்தினம்,

வெங்கடாசலபதி, செந்தில், சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.