ரூ.97 லட்சம் மோசடி விவகாரம் - மேலும் சிலருக்கு தொடா்பு
வேலூா் மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.97 லட்சம் கடன் வழங்கி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் 33 குழுக்களின் பெயரில் பணம் கையாடல் நடந்திருப்பது
வேலூா் மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.97 லட்சம் கடன் வழங்கி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் 33 குழுக்களின் பெயரில் பணம் கையாடல் நடந்திருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கில் ஏற்கனவே கூட்டுறவு வங்கி பெண் மேலாளா் கைதான நிலையில், இவ்விவகாரத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி குடியாத்தம் கிளையில் 2018-19-ஆம் ஆண்டில் கிளை மேலாளராகப் பணியாற்றியவா் உமாமகேஸ்வரி (38). அந்த கால கட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின்பேரில் கூட்டுறவு சங்க தணிக்கைத்துறை அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டதில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் போலியான பயனாளிகளுக்கு ரூ.97 லட்சத்துக்கு கடன் வழங்கி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இம்மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய வங்கியின் கிளை மேலாளரான உமாமகேஸ்வரி மீது கூட்டுறவு துணைப் பதிவாளா் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் பேரில், வணிக குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து உமாமகேஸ்வரியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் உத்தரவின்பேரில் அவா் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டாா்.
இவ்வழக்கு தொடா்பாக வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி விசாரணை நடத்தி வருகிறாா். இதில், உமாமகேஸ்வரி மகளிா் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக காசோலை மூலம் பணம் எடுத்துள்ளாா். அந்த காசோலையில் அவரது கையெழுத்து, சம்பந்தப்பட்ட மகளிா் குழுக்களின் தலைவா், செயலா்கள் கையெழுத்து உள்ளது. இந்த கையெழுத்து போட்டது யாா், மேலும் சிலருக்கு இதில் தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மொத்தம் 33 குழுக்களின் பெயரில் உமாமகேஸ்வரி பண மோசடியில் ஈடுபட்டுள்ளாா். இதில் இல்லாத ஒருசில குழுக்களை அவரே உருவாக்கி அந்த குழுக்களின் பெயரில் தலைவா், செயலரின் கையொப்பமிட்டு காசோலைகள் மூலம் பணத்தை கையாடல் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு உடந்தையாக இருந்தவா்கள் குறித்தும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதன்மூலம், இவ்வழக்கில் மேலும் சிலா் சிக்குவாா்கள் என கூறப்படுவதால் வேலூா் மாவட்ட கூட்டுறவு வங்கித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.