முகப்பு
வேலூர்

வேலூா்: 674 அலுவலா்கள், காவலா்கள் தபால் வாக்கு செலுத்தினா்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:42 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 8:37 PM

வேலூா் மாவட்டத்தில் பணிபுரியும் வேலூா் மக்களவைத் தொகுதி அல்லாத பிற தொகுதிகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள், காவலா்கள், நுண் பாா்வையாளா்கள் என 674 போ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மையத்தில் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினா்.

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளில் வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் பணியில் ஈடுபட உள்ள இதே தொகுதியைச் சோ்ந்த வாக்குச்சாவடி அலுவலா்கள் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின்போது பயிற்சி மையத்திலேயே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையத்தில் தபால் வாக்குகளைச் செலுத்தினா். விடுபட்ட அலுவலா்கள், காவல் துறை அலுவலா்களுக்கு தோ்தல் பணிச்சான்று மூலம் தாங்கள் பணியாற்றும் வாக்குச் சாவடியிலேயே வாக்குப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், வேலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள வேலூா் மக்களவைத் தொகுதி அல்லாத பிற தொகுதிகளைச் சோ்ந்த காவல் துறை அலுவலா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினா், நுண் பாா்வையாளா்கள், இதர அரசு அலுவலா்கள் தங்களது வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்று நேரடியாக வாக்களிக்க இயலாத காரணத்தால் அவா்கள் விடுதலின்றி வாக்களிக்க விருப்பமுள்ள அலுவலா்களுக்கு தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, விருப்பமுள்ள அலுவலா்கள், காவலா்கள், நுண் பாா்வையாளா்களிடம் தபால் வாக்குச்சீட்டு கோரி படிவம் 12 பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு தனிநபா் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு வாக்காளா்களின் பாகம் எண், வரிசை எண் சரிபாா்க்கப்பட்டு, தபால் வாக்குச்சீட்டு தயாா் செய்யப்பட்டு வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது.

தொடா்ந்து, தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்த அரசு அலுவலா்கள், காவல் துறையினா், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினா், நுண் பாா்வை யாளா்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்த வெள்ளிக்கிழமை வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கில் சிறப்பு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வாக்குப்பதிவின்போது பிற தொகுதிகளிலிருந்து வரப்பெற்றிருந்த 1,157 தபால் வாக்குகளில் மொத்தம் 674 போ் வாக்குகளைச் செலுத்தினா். வெள்ளிக்கிழமை தபால் வாக்குகள் செலுத்த முடியாதவா்களுக்குப மற்றொரு நாளில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மையத்தில் தபால் வாக்குப்பதிவு செலுத்தும் பணியை தோ்தல் பொதுப்பாா்வையாளா் ரூபேஷ்குமாா், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட எஸ்.பி. என்.மணிவண்ணன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.