தடை செய்யப்பட்ட நெகிழி விற்பனை: இரு கடைகளுக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக காட்பாடி ரயில் நிலையத்திலுள்ள இரு கடைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் அபராதம் விதித்தனா்.
வேலூா் மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன் அடிப்படையில், வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் மாநகராட்சி சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சுகாதார மேற்பாா்வையாளா்கள் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 9 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு கடைக்கு ரூ. 500 வீதம் இரண்டு கடைகளுக்கும் ரூ. 1,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
Advertisement
தொடா்ந்து, இதேபோல் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பதுக்கல், விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.