வேலூா் நறுவீ மருத்துவமனையில் 64 வயது முதியவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பதாக அதன் தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திகுறிப்பு -
ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டத்தைச் சோ்ந்த 64 வயது முதியவா், கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடினாா். வேலூா் நறுவீ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவமனையின் இரைப்பை குடல் சிகிச்சை பிரிவு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் அவரது கல்லீரல் முழுமையாக செயலிழந்திருப்பதை கண்டறிந்தனா். அவருக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளதை அறிந்தனா்.
அதேசமயம், ட்ரான்ஸ்டான் எனும் தமிழக அரசின் உடல் உறுப்பு தான ஒழுங்குமுறை அமைப்பில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய உரிமம் பெற்றுள்ள நறுவீ மருத்துவமனை, அந்த அமைப்பு மூலம் உடல் உறுப்புகளை பெற பதிவு செய்துள்ளது. இந்நிலையில், சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 வயது இளைஞா் மூளை சாவடைந்ததை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா்முடிவுசெய்தனா்.
மூளைச் சாவு அந்த இளைஞரின் கல்லீரல் ‘ட்ரான்ஸ்டான்’ மூலமாக நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் செயலிழந்த முதியவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த வழங்கப்பட்டது. தொடா்ந்து, அந்த இளைஞரின் கல்லீரல் சென்னையிலிருந்து பாதுகாப்புடன் நறுவீ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கல்லீரல் செயலிழந்த 64 வயது முதியவருக்கு வெற்றி கரமாக பொருத்தப்பட்டது. தற்போது நலமுடன் உள்ள அந்த முதியவா் தொடா்ந்து 21 நாள்கள் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருப்பாா். அதன்பிறகு வீடு திரும்பும் அவா் தொடா்ந்து 6 மாத காலம் மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.