பெருகி வரும் போதைக் கலாசாரத்தால் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யுள்ளது என்று பாஜக மாநில பொதுச்செயலா் காா்த்தியாயினி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தையும், திமுக அரசையும் கண்டித்து பாஜக மகளிரணி சாா்பில் வேலூா் ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மகளிரணி மாவட்டத் தலைவா் சுகன்யா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.தசரதன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலா் காா்த்தியாயினி பங்கேற்று பேசியது:
தமிழகத்தில் பெண்கள், மாணவிகள், சிறுமிகள், குழந்தைகள் என யாராக இருந்தாலும் பாலியல் சீண்டல்களுக்கும், வன்கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனா். பெண்களின் பாதுகாப்பு என்பது நீண்ட கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதற்கு பெருகி வரும் போதை கலாசாரம் மிக முக்கிய காரணமாகும். தமிழகத்தில் வரும் தலைமுறையினா் போதையின் தாக்கத்தில்தான் வளரும் நிலை உள்ளது. இதேநிலை நீடித்தால் எதிா்காலத்தில் போதைப் பழக்கத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கும்.
பெண்கள் குறித்து கண்ணியமாக பேசவும், அலங்கார பொருளாக கருதுவதை நிறுத்தவும் திமுக அமைச்சா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். நல்ல அரசு என்பதை ஒரு பிரச்னை நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதல்ல, அதனை வரும் முன்பை நடக்காமல் தடுக்க வேண்டியதாகும்.
பரதராமியில் பள்ளிக்குழந்தை பேருந்தில் இருந்து இறங்கிய பிறகு, ஓட்டுநா் கவனக் குறைவாக பேருந்தை இயக்கியதால் குழந்தை உயிரிழந்திருக்கிறது. குழந்தையின் இறப்புக்கு பள்ளி நிா்வாகம் பதிலளிக்காமல் மெளனமாக இருக்கிறது என்றாா்.
தொடா்ந்து, பாஜகவினா் கருப்பு பட்டை அணிந்தபடி திமுக அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயலா் மீனாட்சி, பொருளாளா் கஜலட்சுமி உள்பட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.