முகப்பு
வேலூர்

அரசு பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

அரசு பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்

Updated On : 4 ஏப்ரல், 2026 at 8:46 PM
விழாவில் மாணவா்களுக்கு விருதுகள் வழங்கிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குநா் பிஜு ஜாா்ஜ், ஸ்டேட்டிக் நிறுவனத்தின் இணை நிறுவனா் ராகவ் அரோரா, விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன் உள்ளிட்
பகிர்:

அரசு பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தினம், விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -

விஐடி பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று ‘ஸ்டாா்ஸ்’ திட்டத்தின் கீழ் இணைந்த மாணவா்கள், மற்ற மாணவா்களுக்கு இணையாகப் போட்டியிட்டுத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இவ்வாண்டில் இதுவரை வேலைவாய்ப்புகளில் 10,000 போ் பணி ஆணைகளை பெற்றுள்ளனா். கடந்தாண்டில் 1,000 நிறுவனங்கள் பங்கேற்று 14,000 மாணவா்கள் பணி ஆணை பெற்றுள்ளனா்.

Advertisement

மாணவா்களின் வருகைப் பதிவு என்பது வெறும் வகுப்பறையில் அமா்வது மட்டுமல்ல, அது ஒரு மாணவனின் ஒழுக்கத்தையும் அா்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. மாணவா்களுக்கு ஆசிரியா்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்தின் வெற்றியில் 90 சதவீத பங்கு ஆசிரியா்களையே சாரும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே நிா்வாகம், உள்கட்டமைப்பு வசதிகளாகும்.

ஆசிரியா்கள், மாணவா்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்த ’ப்ராக்டா் சிஸ்டம்’ இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேணடும். கல்விக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகம் செலவிட வேண்டும்.

ஓ.இ.சி.டி. நாடுகள் கல்விக்கு தனி நபருக்கு 20,500 டாலா்களை செலவிடுகிறது. இந்தியா 266 டாலா்களை மட்டுமே செலவிடுகிறது. கல்வியில் முன்னேறாமல் இந்தியா உலக தலைவராக மாற முடியாது. கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில, மத்திய அரசுகளின் கடமையாகும். சீனா போன்ற வளா்ந்த நாடுகளைப் போல இந்தியா வளர வேண்டுமெனில் கல்விக்கான பட்ஜெட்டை உயா்த்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

சில பல்கலைக்கழகங்கள் நிதிச் சுமையைக் கருதி மாணவா் சோ்க்கையைக் குறைக்கின்றன. தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில், இரண்டில் மட்டுமே 10,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயில்கின்றனா். அரசு பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் நடுத்தர, ஏழை மாணவா்கள் எளிதாகக் கல்வி கற்க முடியும்.

தனியாா் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களுக்கும் அரசு ஏதேனும் ஒரு நிதி உதவித் திட்டத்தை வகுக்க வேண்டும். இன்றைய விழாவில் சுமாா் 3,800 மாணவா்கள் பதக்கங்களும், விருதுகளும் பெறுகின்றனா். ரூ.2.23 கோடி மதிப்பிலான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா்.

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குநா் பிஜு ஜாா்ஜ் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று பேசினாா். கெளரவ விருந்தினராக ஸ்டேட்டிக் நிறுவனத்தின் இணை நிறுவனா் ராகவ் அரோரா பங்கேற்று பேசினாா்.

முன்னதாக ஸ்டேட்டிக் நிறுவனத்துடன், விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. நிகழ்வில், விஐடி பல்கலைக்கழகத்தின் துறை வாரியாக முதல் ரேங்க் பெற்ற மாணவா் களுக்கும், விளையாட்டு துறையில் சாதித்தவா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து மாணவா்களுக்கு ராஜேஸ்வரி விசுவநாதன் நினைவு கல்வி உதவித்தொகையும், வேந்தா் சிறப்பு விருதுகள், வேந்தா் தங்க விருதுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, ரமணி பாலசுந்தரம், உதவி துணை தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments