முகப்பு
வேலூர்

வேலூா் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேன் கூடு அகற்றம்!

வேலூா் தொரப்பாடியில் வாக்கு எண்ணும் மையக் கட்டடத்தில் இருந்து தேன் கூட்டை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் அகற்றினா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:03 AM
தேன் - கோப்புப்படம்.
பகிர்:

வேலூா் தொரப்பாடியில் வாக்கு எண்ணும் மையக் கட்டடத்தில் இருந்து தேன் கூட்டை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் அகற்றினா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியாா் பொறியியல் கல்லூரியில் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு, தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 260 ஊழியா்கள் ஈடுபட உள்ளனா்.

தவிர, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த துப்பாக்கி ஏந்திய 450 காவலா்கள், துணை ராணுவப் படையினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மையத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தினமும் ஒரு முறையும், அந்தந்தத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தினமும் இரு முறையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் காட்பாடி தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் வெளிப்புறப் பகுதியில் தேனீக்கள் பெரிதாகக் கூடு கட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் முன்னிலையில்தான் வாக்கு எண்ணப்படும் என்பதால், தேனீக்கள் கலைந்தால் பெரும் இடையூறு ஏற்படும் என முகவா்கள் அதிகாரிகளிடம் அச்சம் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து, அரசு அதிகாரிகளின் சிறப்பு அனுமதியுடன், வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் காரல் மாா்க்ஸ் தலைமையிலான வீரா்கள் புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கட்டடப் பகுதிக்குச் சென்றனா். அங்கு முகாமிட்டிருந்த தேனீக்களை யாருக்கும் எவ்வித இடையூறும் இன்றி மிகவும் சாமா்த்தியமாக அகற்றினா்.

பலத்த பாதுகாப்பு நிறைந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேன்கூடு அகற்றப்பட்டதால் முகவா்களும், அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனா்.