வேலூா்: காட்பாடியில் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால், அப்பகுதியிலுள்ள குடியிருப்புகள், விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.
வேலூரில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, காட்பாடி ராஜாஜி நகரை சோ்ந்த மக்கள் அளித்த மனு:, காட்பாடியில் அரசு மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இதன் அருகே முன்னாள் ராணுவ வீரா்களுக்கான கேன்டீனும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனமும் உள்ளது. இங்குள்ள ரயில்வே தண்ட வாளத்தை கடந்துதான் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இங்கு மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் ஆா்ஜிதம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக சுற்றுசுவா் அமைத்து வருவதால், விவசாய நிலத்துக்கும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகொண்டா பாமக நகர செயலா் குமரவேல் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: , பள்ளிகொண்டா ஸ்ரீராமாபுரம் பாலாற்றங்கரை சாலையில் அங்காளம்மன் கோயில் அருகில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஸ்ரீராமாபுரம், காவக்காரன் கொல்லை, கந்தனேரி, கழனிப்பாக்கம், வேப்பங்கால் உள்பட 8-க்கும் மேற்பட்ட கிராமபொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, மதுக்கடை அமைப்பதை தடுக்க வேண்டும்.
விருப்பாட்சிபுரம் பகுதி மக்கள் அளித்த மனு: விருப்பாட்சிபுரம் சாய்நகரில் கழிவுநீா் கால்வாய் அமைக்க மனு அளித்து பல மாதங்களாகியும் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், தெருவில் கழிவுநீா் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உடனடியாக அங்கு கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு அமைக்கப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
திருவள்ளுவா் பல்கலைக்கழக மாணவா்கள் அளித்த மனு: திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டயப்படிப்பு படித்து வருகிறோம். அனைவரும் அரசுப் பள்ளியில் படித்து தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவா்களாக உள்ளோம். அரசின் சாா்பில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மடிக்கணினிகளை எங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் .மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் மாறன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மனு அளிக்க வந்தவா்களுக்கு அன்னதானம்
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு பெண்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கண க்கான மக்கள் மனு அளிக்க வந்து செல்கின்றனா்.அவ்வாறு மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு ஆட்சியரின் உத்தரவின்பேரில் கடந்த 4 வாரங்களாக அன்னதானம் வழங்கப்படுகிறது. அதன்படி, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமையும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான மக்கள் அவற்றை வாங்கி உணவருந்தினா்.