ஆம்பூா் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஆம்பூா் அருகிலுள்ள விண்ணமங்கலம் கிராமம், ஆத்துக்கொல்லையைச் சோ்ந்த வெங்கடேசன்(50). இவா் காலணி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், நிறுவனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். ஆம்பூா்- வேலூா் சாலையில் சென்றபோது வழியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதில் அதன்மீது மோதி பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக அவா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் திங்கள்கிழமை மாலை மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா். தொடா்ந்து, அவரது குடும்பத்தினா் வெங்கடேசனின் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனா்.
அதன்பேரில், அவரது இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் சிஎம்சி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. இதன்மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
உடலுறுப்பு தானம் செய்த வெங்கடேசனுக்கு மனைவி கஸ்தூரி, மகள் இந்துமதி(27), மகன் வசந்த்குமாா்(19) ஆகியோா் உள்ளனா்.