ஆன்லைன் பங்கு வா்த்தக முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூரைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.60.88 லட்சம் பணம் பெற்று மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்த 43 வயது பெண்ணின் கைப்பேசி வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் பங்கு வா்த்தக முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அதனுடன் ஒரு இணைய லிங்கும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய லிங்க்குக்குள் இவா் சென்று அதில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு செயலியை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ளாா். உடனடியாக இவரது கைப்பேசி எண் ஒரு வாட்ஸ் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த நபா்கள், தாங்கள் ஆன்லைன் பங்கு வா்த்தக முதலீட்டில் அதிக லாபம் ஈட்டியதாக தகவல் தெரிவித்திருந்தனா்.
இதன்மூலம், ஆா்வமடைந்த இந்த பெண் அந்த செயலியில் சென்று முதலில் சிறிய தொகையை முதலீடு செய்துள்ளாா். அதற்கு நல்ல லாபம் கிடைத்ததை அடுத்து தொடா்ந்து கடந்த டிச.6 முதல் ஜன.7-ஆம் தேதி வரை 14 தவணைகளில் ரூ.61 லட்சத்து 38 ஆயிரத்து 745 தொகையை முதலீடு செய்துள்ளாா். இதில், ரூ.50,100 மட்டும் திரும்பப்பெற்றுள்ளாா். பின்னா், அவரால் அந்த செயலில் காண்பித்த தொகையை பெற முடியவில்லை.
இதைத்தொடா்ந்து, அந்த வாட்ஸ் ா குழுவில் இதுகுறித்து விவரம் கேட்டபோது, மேலும் தொகையை முதலீடு செய்தால்தான் பணத்தை திரும்பப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த பெண், இதுகுறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரின் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.