திருநங்கை முன்மாதிரி விருதுடன் ரூ.1 லட்சம் பரிசு, பாராட்டு சான்று பெற தகுதியுடைய திருநங்கையா் இணையதளத்தில் பிப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு - தமிழ்நாடு திருநங்கையா் நல வாரியம் மூலம் திருநங்கையருக்கு ஆண்டுத்தோறும் திருநங்கையா் தினமான ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கை முன்மாதிரி விருது, ரூ.1 லட்சம் பரிசு, பாராட்டு சான்று ஆகியவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. இவ்விருது பெற வேலூா் மாவட்டத்தில் வாழும் திருநங்கையா்கள் தமிழக அரசின் இணையதளம் மூலம் பிப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விருது பெற திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும், குறைந்தது 5 திருநங்கைகளை அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்,
திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது ஆகிய தகுதிகளைக் கொண்ட திருநங்கைகள், திருநம்பிகள் இணையதளத்தில் பதிவு செய்தவுடன் தங்களின் சுய விவரங்கள், பெற்ற விருதுகளின் விவரங்கள், சேவையை பாராட்டிய பத்திரிகை செய்தி தொகுப்புகள், தங்களின் சமூகசேவை மூலம் பயனடைந்த பயனாளிகள் விவரம், சேவை புரிந்த செயல்முறை விளக்கம் (புகைப்படங்களுடன்), காவல்நிலையத்தில் பெறப்பட்ட குற்றவழக்கு ஏதும் இல்லை எனும் சான்று ஆகியவற்றுடன் கையேடாக வேலூா் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அளிக்கவும் வேண்டும். எனவே, தகுதியுடைய திருநங்கை, திருநம்பிகள் இவ்விருது பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.