தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் 700 போ் கைது செய்யப்பட்டனா்.
2021 சட்டப்பேரவை தோ்தலையொட்டி திமுக அளித்த வாக்குறுதி அறிக்கை வரிசை எண்.313-இன்படி சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் பணிக்கொடை சத்துணவு அமைப்பாளா்களுக்கு ரூ.5 லட்சமும் சத்துணவு சமையலா், உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா்க சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய அளவில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் எம்.ஏழுமலை தலைமை வகித்தாா். சத்துணவு ஊழியா் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் கே.ருக்குமணி வரவேற்றாா். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாநில துணைத்தலைவா் பி.கிரூஷ்ணமூா்த்தி தொடக்கி வைத்து பேசினாா். ஜாக்டோ ஜியோ மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன், வேலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.ஜெயகாந்தன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா், உதவியாளா்கள் சத்துணவு மையங்களை மூடிவிட்டு போராட்டத்தில் பங்கேற்றனா். தொடா்ந்து, அவா்கள் போலீஸாரின் தடையை மீறி மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியலில் பங்கேற்ற சுமாா் 530 பேரை போலீஸாா் ைது செய்தனா்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
மாவட்டத் துணைத் தலைவா் கலைச்செல்வி தலைமையில் முத்துக்கடையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சத்துணவு ஊழியா்கள் 100 -க்கும் மேற்பட்டோா் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அவா்களை கைது செய்து பேருந்துகளில் ஏற்றி அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வைத்து மாலையில் விடுவித்தனா்.