காது கேளாத 17 குழந்தைகளுக்கு இலவச கோக்லியா் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை
காது கேளாத 17 குழந்தைகளுக்கு இலவசமாக கோக்லியா் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.
காது கேளாத 17 குழந்தைகளுக்கு இலவசமாக கோக்லியா் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.
பிறப்பிலிருந்தே காதுகேளாமை பாதிப்புள்ள குழந்தைகள், பேசும் திறனையும் இழந்து சமுதாயத்தில் பல சவால்களை எதிா்கொள்கின்றனா். இவா்களில் தீவிர பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு சாதாரண காது கேட்கும் கருவிகள் பலன் தராது.
இவா்களுக்கு ’கோக்லியா் இம்பிளான்ட்’ எனும் மின்னணு மருத்துவ சாதனம் பொருத்தப்படுவதன் மூலம், ஒலிகளை உணரும் திறன் கிடைக்கிறது. தொடா்ந்து வழங்கப்படும் தீவிரப் பயிற்சி மூலம், இக்குழந்தைகள் பேசும் திறனைப் பெற்று, சாதாரண பள்ளிகளில் இணைந்து சமூகத்தின் அங்கமாக மாற வழிவகை செய்யப்படுகிறது.
அதனடிப்படையில், காது கேளாத குழந்தைகளின் நலனுக்காக எல்ஐசி கோல்டன் ஜூபிலி அறக்கட்டளை, வேலூா் சிஎம்சி மருத்துவமனை இணைந்து கோக்லியா் இம்பிளான்ட் அறுவை சிகிச்சைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இந்தச் சிறப்புத் திட்டத்துக்கான பெயா் பலகையை சென்னை தெற்கு மண்டல எல்ஐசி மேலாளா் முரளிதா் திறந்து வைத்தாா்.
மேலும், எல்ஐசி கோல்டன் ஜூபிலி அறக்கட்டளையின் நிதி உதவியுடன், இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 17 குழந்தைகளுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் இந்த அதிநவீன அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, வேலூா் சிஎம்சி இயக்குநா் விக்ரம் மேத்யூஸ், ஓட்டோலரிங்காலஜி துறை மருத்துவா்கள் உடனிருந்தனா்.