‘பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்கள் மீது விசாரணை நடத்த மேல் முறையீட்டு குழு’
தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்கள் மீது விசாரணை நடத்த மேல் முறையீட்டு குழு
வேலூா்: தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்கள் மீது விசாரணை நடத்த மேல் முறையீட்டு குழு அமைக்கப்பட்டிருப்பதாக வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் ஆகியோா் தெரிவித்தனா்.
இதுகுறித்து, அவா்கள் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியது -
வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிக்கும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தொடா்ந்து, ஐந்து தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
வேலூா் மாவட்டத்தில் இறுதி வாக்காளா்கள் பட்டியலில் ஆண்கள் 5 லட்சத்து 49ஆயிரத்து 654 பேரும், பெண்கள் 5 லட்சத்து 83 ஆயிரத்து 769 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 164 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 33 ஆயிரத்து 587 போ் வாக்காளா்களாக உள்ளனா். தோ்தலையொட்டி மொத்தம் 676 அமைவிடங்களில் 1,426 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
35 கண்காணிப்பு குழுக்கள்:
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாகவோ அல்லது பரிசுப்பொருள்களாக ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமாவோ கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். இதற்காக பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 35 கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகே அவை திரும்ப ஒப்படைக்கப்படும். இதற்காக மேல் முறையீட்டு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
கட்சி, சின்னங்கள் தொடா்பான சுவா் ஓவியங்கள், பேனா்கள் அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் 20% கூடுதல் இருப்பு அடிப்படையில் 1,712 இயந்திரங்களும், விவிபாட் இயந்திரங்கள் 30% கூடுதல் அடிப்படையில் 1,855 இயந்திரங்களும் கைவசம் உள்ளன.
வேலூா் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 643 துப்பாக்கிகள் உள்ளன. இவற்றில் 238 துப்பாக்கிகள் அத்தியாவசிய தேவைக்காக விலக்கு அளிக்க கோரி விண்ணப்பித்துள்ளனா். 3 துப்பாக்கிகள் மட்டும் வந்து சேர வேண்டியுள்ளது. மற்றவை அந்தந்த காவல் நிலையம் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மொத்தமுள்ள 400 பேரில் 210 பேரைப் பிடித்து தாங்கள் எந்தவித குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேம் என்று பிரமாண பத்திரம் எழுதி பெறப்பட்டுள்ளது.
6 கம்பெனி துணை ராணுவம்:
மாவட்டத்தில் 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. வேட்பாளா்கள் பட்டியல் வெளியான பிறகு இவை மறுஆய்வு செய்யப்பட்டு இறுதிசெய்யப்படும். வேலூா் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக 6 கம்பெனி துணை ராணுவப்படையினா் ஈடுபட உள்ளனா். இதில், 2 கம்பெனி துணை ராணுவப்படையினா் தற்போது வந்து சோ்ந்துள்ளனா்.
வேலூா் மாவட்டத்தில் அண்டை மாநில எல்லைகளில் 6 சோதனைச்சாவடிகள் உள்ளன. இவற்றில் நான்கு கலால் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸாா் கண்காணிப்பிலும், 2 சோதனைச்சாவடிகள் சட்டம் ஒழுங்கு போலீஸாா் கட்டுப்பாட்டிலும் உள்ளன. 6 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேமரா காட்சிப்பதிவுகளும் 60 நாள்கள் வரை சேமிக்க முடியும்.
மாவட்டத்தில் தொலைத்தொடா்பு அப்பால் பீஞ்சமந்தையில் 10, அரவட்லாவில் 2 என மொத்தம் 12 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு தொலைத்தொடா்பு வசதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.