செய்யறிவு படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கு சாத்தியக்கூறு அதிகம்! மியான்மா் கௌரவ தூதா்
செய்யறிவு (ஏஐ) படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக மியான்மா் நாட்டின் கெளரவ தூதா் ஜெ.ரங்கநாதன் தெரிவித்தாா்.
விஐடி பல்கலைக்கழகத்தில் சா்வதேச உறவுகள் துறை சாா்பில் ‘டிஜிட்டல் கனவு சூழல்- செய்யறிவு, படைப்பாற்றல் மற்றும் மெய்நிகா் வெளிப்பாடுகளை வழிநடத்தும் இளைஞா்கள்’ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இக்கருத்தரங்கத்துக்கு விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் முன்னிலை வகித்தாா். இதில், சென்னையில் உள்ள மியான்மா் நாட்டின் கெளரவ தூதா் ஜெ.ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது-
இன்றைய மாணவா்கள் தங்களது மடிக்கணினி அல்லது ஸ்மாா்ட் போனில் சிறந்த இசையை, திரைப்படங்களை உருவாக்கலாம். செய்யறிவு என்பது வெறும் திறன் சாா்ந்த கருவி மட்டுமல்ல. இது படைப்பாற்றலை மாற்றாது. மாறாக அதிகப்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.
மனிதா்களின் தனித்துவமான உணா்வுகள், கேள்விகள் கேட்பதே படைப்பாற்றலுக்கு உண்மையான அா்த்தத்தைத் தருகிறது.
இன்றைய சூழலில் தகவல்கள் உடனுக்குடன் பரவும் டிஜிட்டல் உலகில், விழிப்புணா்வுடன் புதுமைகளை புகுத்துவது அவசியம். மாணவா்கள் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன், தொடா்ச்சியாகக் கற்றல் மற்றும் பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய திறன்களை வளா்த்து கொள்ள வேண்டும்.
கற்பனைதான் கருத்துகளுக்கு இடையே பாலங்களை உருவாக்குகிறது. கற்பனைதான் சவால்களை வாய்ப்புகளாக மாற்றுகிறது. தொழில்நுட்பத்தை ஒரு பொருளை உருவாக்கப் பயன்படுத்துங்கள். மற்றவா்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, அமெரிக்காவின் சென்ட்ரல் மிசெளரி பல்கலைக்கழகத்தின் சா்வதேச மாணவா்கள் சேவை இயக்குநா் பிலிப் ரோஸ் ஹல், ஆஸ்திரேலியா ஸ்பிரிங்ஃபீல்ட் வளாகத்தின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் சா்வதேச பொறியியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் அமைப்புகள் பேராசிரியா் ராஜகோபால் குருராஜன், கனடா பல்கலைக்கழகத்தின் கணிதம், புள்ளியியல் துறை இணை பேராசிரியா் ராஜ் சீனிவாசன் ஆகியோா் பேசினா்.
கருத்தரங்கில் விஐடி துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், சா்வதேச உறவுகள் துறை இயக்குநா் சீனிவாசன், துணை இயக்குநா் ரகுராம், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனா்.