ராசிபுரம், செப்.17: வாகசப் பிரியர்களின் அறிவுப் பசியை போக்கும் பணியைச் செய்துவரும் பொது நூலகங்கள், குறிப்பாக கிளை நூலகங்கள் பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 143 நூலகங்களில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் கிளை நூலகங்கள், கிராமப்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 29 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான நூலகங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்கிவரும் நிலையில், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் உள்ளிட்ட ஒரு சில முக்கிய நூலகங்கள் மட்டும் 50 ஆண்டுகளாக நெருக்கடியில் செயல்பட்டுவருகின்றன.
1958-ல் துவங்கப்பட்ட நாமகிரிப்பேட்டை நூலகம் தற்போது, பேரூராட்சிக்குச் சொந்தமான பாதுகாப்பற்ற சிறிய கட்டடத்தில் இயங்குகிறது.
வாடகை ஏதுமின்றி இலவசமாக இயங்கி வந்தாலும், 6 பேர் மட்டுமே அமரும் இடவசதி, போதிய வெளிச்சமின்மை, பேருந்து நிலைய சிறுநீர் கழிப்பிட துர்நாற்றம் போன்றவற்றால் வாசகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. நாள்தோறும் சுமார் 40 பேர் வந்து செல்லும் இந் நூலகத்தில் 3 ஆயிரத்து 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 20 ஆயிரம் புத்தகங்கள், 12 மாத, வார இதழ்கள், 10-க்கும் மேற்பட்ட நாளிதழ்களுடன் செயல்படும் நூலகம், மிகப் பழமையான ஒடுகள் வேய்ந்த கட்டடம் என்பதால் புத்தகங்களுக்கு மட்டுமல்ல, அதனை வாசிக்கும் வாசகர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை. புத்தகங்களையும், நாளிதழ்களையும் பாதுகாத்து வைக்கவும் இந்நூலகத்தில் இடமில்லை.
ஏற்கனவே 2-ம் நிலை நூலகமாக இருந்து வந்த நாமகிரிப்பேட்டை நூலகம், இடவசதியின்மையால் வாசகர் வருகை குறைந்து 3-ம் நிலையாகத் தரம் குறைக்கப்பட்டுள்ளது என்பது வேதனையளிப்பதாக உள்ளது என்கின்றனர் நூலகப் பிரியர்கள். இந்த நூலகத்தை இடம் மாற்றி மீண்டும் தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம், நூலகத் துறைக்கு இவ்வூர் பிரமுகர்கள் பலமுறை கோரிக்கைவிடுத்தும் இதுவரை இதற்கு விடை கிடைக்கவில்லை. சொந்த இடம் வாங்க நிதியில்லை என நூலகத் துறை கைவிரிக்கும் நிலையில்,அரசு இதற்கு நிதி ஒதுக்கி புதிய நூலகம் கட்டித்தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
ராசிபுரம் நூலகம்: 1955-ல் துவங்கப்பட்ட மிக முக்கிய நூலகமான ராசிபுரம் முதல் நிலை கிளை நூலகமும் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. பின்னர் 1972 முதல் அரிமா சங்கக் கட்டடத்தில் வாடகை ஏதுமின்றி பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் நகர மக்கள் தொகை உயர்வு, வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், நூல்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. இதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, நூல்களைப் பராமரிக்க போதிய இடமின்றி சிரமத்துக்குள்ளாகியுள்ளது இந்நூலகம்.
10 ஆயிரம் உறுப்பினர்கள், 58 ஆயிரம் நூல்களைக் கொண்டு நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்லும் இந் நூலகத்திற்கு, சொந்தக் கட்டடம் கட்ட அரசு அல்லது நகராட்சி இடம் ஒதுக்க வேண்டும் என்கிறார் ராசி நட்புறவு நலச் சங்கத் தலைவர் எம்.ராகவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.