திருப்பூர், ஜன.8: விதைக்கத் தேவையான வெங்காயம் இல்லாமல் வெளி மாவட்ட வியாபாரிகளிடம் கையேந்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பதுக்கல் காரணமாக உச்சம் தொட்ட வெங்காய விலையால் விதை வெங்காயத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கும் அவல நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 ஹெக்டர் பரப்பளவில் சின்னவெங்காயமும், ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பெரிய வெங்காயமும் சாகுபடி செய்யப்படுகின்றன. அதன் படி, இம்மாவட்டத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் 25
ஆயிரம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயமும், சுமார் 15 மெட்ரிக் டன் பெரிய வெங்காயமும் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
திருப்பூர் பனியன் நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து விவசாயத்துக்குத் தேவையான ஆட்கள் கிடைக்காததை அடுத்து ஆண்டுதோறும் வெங்காயம் உள்ளிட்ட பயிர் சாகுபடி அளவு குறைந்து வருவதுடன், அப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்யும் வெங்காயத்தை நேரடியாக விற்பனை செய்ய முடியாமல் தங்கள் நிலங்களுக்கு வரும் வியாபாரிகளிடம் கட்டுபடியாகக்கூடிய விலைக்கு விற்றுவிடுகின்றனர். இதனால், தங்கள் உற்பத்திப்பொருட்கள் மீதான செல்வாக்கு வியாபாரிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அதன்படி, குறைந்தபட்ச விலைக்கு வாங்கும் வியாபாரிகள் பதுக்கிவைத்து விளைச்சல் குறைந்த தற்போதைய சூழ்நிலையில் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
பொங்கலூர், பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தைப்பட்டத்தில் விதைக்க விவசாயிகள் தேக்கி வைத்திருந்த பெரும்பாலான விதை வெங்காயங்கள் கடந்த 2 மாதங்களாக பெய்த தொடர் மழையில் நாசமாயின. தற்போது தைப்பட்டம் நெருங்கி வரும் நிலையில் விதைக்கத் தேவையான வெங்காயம் இல்லாமல் வெளி மாவட்ட வியாபாரிகளிடம் கையேந்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி, பெரம்பலூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விதைக்கத் தேவையான வெங்காயங்களை வாங்கி வருகின்றனர். அதுவும் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை என்ற அதிகபட்ச விலைக்கு.
சாகுபடி செய்யும் விவசாயிக்கே தற்போது விதைக்க வெங்காயம் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது.
இதுகுறித்து, பொங்கலூரை அடுத்த திருமலைநாய்க்கன்பாளையம் விவசாயி சுப்பிரமணி கூறுகையில், ஒரு ஏக்கரில் விதைக்கத் தேவையான 500 கிலோ விதை வெங்காயத்தின் தற்போதைய விலை ரூ.20,000. அதை விதைத்து சாகுபடி செய்யும் வரை ஆகும் செலவு ரூ.25,000. அதன்மூலம் 120 முதல் 140 நாட்களுக்கு பிறகு ஒரு ஏக்கரின் 7 ஆயிரம் கிலோ வெங்காயம் சாகுபடி செய்ய முடியும்.
அதன்படி, ஒரு கிலோ ரூ.15 வரை வியாபாரிகளிடம் எதிர்பார்க்க முடியும் என்றால் 7 ஆயிரம் கிலோவுக்கு ரூ.1 லட்சம் முதல் 1.05 லட்சம் கிடைக்கலாம். செலவை ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு பிறகு ஒரு ஏக்கரில் அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் மட்டுமே பெற முடியும். ஆனால், விவசாயிகளிடம் இருந்து வாங்கிவிற்கும் வியாபாரிகள் உடனுக்குடன் அத்தொகையை பெற்றுவிடுகின்றனர்.
இந் நிலையில், தற்போது விதைக்கத் தேவையான வெங்காயத்தையும் அதிகப்படியான விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான
விவசாயிகள் வெங்காயம் விதைப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். இப்பிரச்னையில் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி விதைக்குத் தேவையான வெங்காயத்தை குறைந்த விலைக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலை நுகர்வோர் மத்தியில் மட்டுமின்றி தற்போது விவசாயிகளிடமும் கண்ணீரை வரவழைத்துக் கொண்டுள்ளது. சந்தையில்
வெங்காயத்தின் விலையை குறைக்கும் முன்பு விளைச்சலுக்கு தேவையான விதை வெங்காயத்தின் விலையை உடனடியாக குறைக்க வேண்டியது அரசின் கடமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.