உதகை, மார்ச் 11: குடிநீர் வசதியின்றி கடந்த 35 ஆண்டுகளாக கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கோடைகாலமும் தொடங்கியுள்ளதால் இவர்களது குடிநீர் பிரச்னையும் அதிகரித்து வருகிறது.
உதகை அருகேயுள்ள இத்தலார் பகுதியில் உள்ளது டி.காந்தி நகர். இப்பகுதியில் சுமார் 75 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே கூலித் தொழிலாளிகள். இப்பகுதியில் குடிசைகள் அமைத்து நீண்ட காலமாக வசித்து வரும் இம்மக்களுக்கு கடந்த 1976ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளால் 1988ம் ஆண்டில் தாட்கோ மூலம் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன.
இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த 1988ம் ஆண்டில் இரண்டு தண்ணீர் தொட்டிகள் மற்றும் 5 பொதுக்குழாய்கள் அமைத்து தரப்பட்டன. ஆனால், இப்பகுதியில் போதிய மழை இல்லாததாலும், அருகில் நீராதாரங்கள் இல்லாததாலும் இந்த தண்ணீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் பயனற்றவையாகவே மாறிவிட்டன. பயனற்ற நிலையிலிருந்த இந்த குழாய்களும் பின்னர் அகற்றப்பட்டு விட்டன.
இப்பகுதி மேட்டுப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே இப்பகுதிக்கு சற்று தொலைவில் ஓடும் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக மோட்டார் மற்றும் இதர சாதனங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
இதையடுத்து இந்த ஆற்றின் அருகே கிணறு வெட்டப்பட்டது. ஆனால், இந்தக் கிணறு தனக்குச் சொந்தமான நிலத்தில் வெட்டப்பட்டதாகக் கூறி ஒருவர் தொடர்ந்த வழக்கால் அந்தக் கிணற்றையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால், இவர்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள வனப்பகுதிக்குச் சென்று அங்குள்ள ஊற்றிலிருந்தே தண்ணீர் சேகரித்து வருகின்றனர்.
ஆனால், இப்பகுதியில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் தனியாக தண்ணீர் எடுக்கச் செல்வதற்கும் பயப்படுகின்றனர். இதனால் தண்ணீர் எடுக்க கூட்டமாகவே செல்கின்றனர். தினந்தோறும் தண்ணீர் எடுப்பதற்கே அதிக நேரத்தை செலவிட்டு விடுவதால் இவர்களால் கூலி வேலைக்கும் செல்ல முடிவதில்லை. இதனால், தண்ணீர் பிரச்னையோடு, பொருளாதார பிரச்னையும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குடிநீரும் இல்லாமல், வேலையும் இல்லாமல் தொடர்ந்து இப்பகுதி மக்கள் அவதியுற்று வருகின்றனர். இவர்களது கோரிக்கை குறித்து அவ்வப்போது அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டுச் சென்றாலும் இதுவரையிலும் நிரந்தரத் தீர்வு ஏற்படாத நிலையே நீடிக்கிறது. அதிலும் தற்போது கோடைகாலமும் தொடங்குவதால் இவர்களது தண்ணீர்த் தேவையும் அதிகரித்துள்ளது.
தற்போது இவர்கள் தண்ணீர் எடுக்கும் ஊற்றுப் பகுதியில் வனவிலங்குகளும் தண்ணீருக்காக வந்து விடுவதால் சேறு கலந்த பாதுகாப்பற்ற கலங்கிய தண்ணீரையே எடுத்துச் செல்கின்றனர். இப்பகுதி சோலைக்காடாக இருப்பதால் இங்குள்ள யூகலிப்டஸ் மரங்களும் அதிகளவில் தண்ணீரை உறிஞ்சி விடுகின்றன. இதனால் தாங்கள் குடியிருக்கும் பகுதியை விட்டு வெளியேற முடியாமலும், தண்ணீருக்காக தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாலும் இம்மக்கள் விரக்தியான மனநிலையிலேயே உள்ளனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து 35 ஆண்டுகளாக குடிநீருக்காக அவதிப்பட்டு வரும் இம்மக்களின் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டுமென்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது. இந்த கோடைகாலத்திலாவது குடிநீர் பிரச்னை தீர்க்கப்படுமா என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் டி.காந்திநகர் பகுதி பொதுமக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.