கோயம்புத்தூர்

தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை: இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த கோரிக்கை

DIN

தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின்போது, இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழக தலித் மக்கள் சங்கத் தலைவர் எஸ்.செல்வகுமார் தலைமையில், அண்ணல் அம்பேத்கர் உள்ளாட்சிப் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி தமிழ்நாடு செல்வம், மத்திய, மாநில அரசு எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கோவை முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தியிடம் மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அரசாணை 60 தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு சேர்க்கைக்காக மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரும் நிலையில், தனியார் பள்ளிகள் யாவும் தங்களை அணுகும் பெற்றோர்களிடம், நாங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்துவோம் என்று தெரிவித்து வருகின்றன.
இதனால், இந்த ஆண்டும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு என்பது கானல் நீராகிவிடும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசாணை எண் 587 தெரிவிக்கிறது.
ஆனால், தனியார் பள்ளிகள் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த நாளிலேயே அதிக நன்கொடை வழங்குபவர்கள், அதிக மதிப்பெண் எடுப்பவர்களைக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிடுகின்றன.
இதனால் 11-ஆம் வகுப்பில் இடஒதுக்கீடு உள்ளது என்பதை மறக்கடிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 11-ஆம் வகுப்புகளில் இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.
அருந்ததியர் முன்னேற்றக் கழகத்தின் கோவை மணியரசு, பாஜக சிறுபான்மையினர் அணி மாவட்டத் தலைவர் வி.ஜோதி, சிவராமன், மருதாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT