கோயம்புத்தூர்

போலி மது விற்பனையைத் தடுக்கக் கோரி விவசாய சங்கத்தினர் மனு

DIN

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலி மது விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய சங்கத்தினர் தாம்பூலத் தட்டுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் அளித்த மனு விவரம்:
 கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, அன்னூர், சூலூர், கோவில்பாளையம் பகுதிகளில் காவல் துறையினரின் அனுமதியுடன் போலி மது விற்பனை செய்யப்படுகிறது. 
அண்டை மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வந்து இரவு நேர உணவகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. 
மாறாக காவல் துறையினர் சமூக விரோதிகளுக்குத் துணை போகின்றனர். மதுவைக் குடித்து விட்டு விவசாய நிலங்களில் பாட்டில்களை உடைக்கின்றனர். பொது இடங்களில் திறந்த வெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், போலி ஆலைகளில் மது தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதியை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை: கோவையில், திருவள்ளுவர், வள்ளுவர், வள்ளுவன் என்று அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜோதிடம், வான சாஸ்திரம், சித்த வைத்தியம் ஆகிய குலத் தொழில்களைச் செய்து வருகிறோம். ஆனால், வடவள்ளியைச் சேர்ந்த நபர் ஒருவர் இணையதளத்தில் எங்களது ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி வருகிறார். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இணையதளத்தில் அவதூறு பதிவு செய்துள்ளதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளுவர் மகாஜன நலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனச் சோதனையை விரிவுபடுத்த வேண்டும்: கோவை மாநகரில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் வாகன இயக்குபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதால் மாநகரில் வாகன விபத்துகள் குறைந்துள்ளன. ஆனால், கோட்டைமேடு, கரும்புக்கடை, உக்கடம், ஆத்துப்பாலம் ஆகிய பகுதிகளில் இது போன்ற வாகனத் தணிக்கை நடத்தப்படுவதில்லை.
மது தவிர பிற போதைப் பொருள்களை பயன்படுத்திவிட்டு வாகனம் இயக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பேரூர் சாலை, செல்வபுரத்தில் உள்ள திருமணி மண்டபம் அருகே உரிய அனுமதி இல்லாமல் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதைத் தடுக்க வேண்டும் என இந்து உரிமைக் கழக மாநிலத் தலைவர் ஜெ.ஜெகதீசனார் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT